Wednesday, January 28, 2009

வரலாற்றைப் படைத்திடுவோம் !

சுதந்திரம் என்பது என்ன ?
சுற்றித் திரிகின்ற மனம்
நின்று பார்ப்பது தானே !

கேட்பது எல்லாம் கேள்வி
என்றால் விடை அங்கே
விருப்பம் தானே !

ஓடுவதே நதி என்றால்
தேங்குவது ஒரு நாள்
தேடும் நீர் தானோ ?

வீழ்வது அருவி என்றால்
வீழ்ந்தோடும் நீரே
அழகான ஆறாகும்.

நினைப்பது மனமென்றால்
எண்ணங்கள் எங்கு செல்லும் ?
எங்கும் செல்லும் !

இயற்கையை வளமென்றால்
இன்பமெலாம் பரவி நிற்கும்.

பறப்பது நம் கொடி என்றால்
பாரெல்லாம் நாம் உயர்வோம் !

வளர்வது நாமென்றால்
உயர்வதும் நாம் தானே !

நாளும் உழைத்திட்டால்
உண்மை சுதந்திரம்
நமதாகும் .

உயரும் நாட்டை
உயர்த்துவோம் !

உண்மை உழைப்பால்
நன்மைகள் சேர்ப்போம் !
நலம் பல காண
நாளும் உழைப்போம் !

வகுக்கின்ற திட்டங்கள்
வளமாகும் நாட்டில் !

உகுக்கின்ற உழைப்பெல்லாம்
உயர்வாகும் உலகில் !

நித்தம் நினைக்கின்ற
சத்தம் எல்லாம்
சத்தியமாய் சாதிக்கும் !

ஏற்றம் பல காண
ஏங்கும் மக்கள் !
ஒற்றுமையை உணர்கின்ற
காலமன்றோ நாட்டின் வளர்ச்சி !
நம்மை நாம் வகுக்கின்ற
நாட்டத்தில் காண்போம் நாட்டை !

நன்மைகளை உண்மைகளை
உயர்வாகக் கொள்வோம் !
உழைப்பாலே இந்நாட்டை
உயர்த்திடுவோம் !
வருங்காலம் வளமாக
வரலாற்றைப் படைத்திடுவோம் !

செல்வி ஷங்கர்
---------------------

Thursday, January 8, 2009

மனப்போராட்டம்

எப்படி இருந்த நாடு
ஏன் இப்படி ஆயிற்று ?

இதற்கு யார் காரணம் ?
இப்படியே போனால் இது
எங்கே போய் நிற்கும் ?

போட்டிகளும் போராட்டங்களும்
எதைச் சொல்கின்றன நமக்கு ?

யாரவது தட்டிக்
கேட்க முடிகிறதா ?
கேட்டால் என்னவாகும் ?
எப்படியும் இன்னிலை
மாறுமா ? அப்படிஎன்றால்
அது யாரால் முடியும் ?

மாற்றங்கள் மறுபடியும்
மறுபடியும் வருகின்றன !
ஆனால் மாறுகின்றோமா ?

நினைத்துப் பார்த்தால்
இது எப்படி முடியும் ?
என்று தான் தோன்றுகிறது.

வருங்காலம் நினைக்குமா ?
இல்லை நிகழ்காலம்
நிகழ்த்துமா ? கடந்தகாலங்கள்
நமக்குச் சொல்லிய
பாடம் என்ன ?

படித்தேன் ஒரு கவிஞனின்
கடந்த காலத்தை
அவனும் புலம்போ
புலம்பென்றுதான்
புலம்பி இருக்கிறான் !

அவனுக்கு முந்தைய
கவிஞனின் காலத்தையும்
புரட்டிப் பார்த்தேன் !
அவனும் போராடிப்
போராடி வாழ்நாளின்
பாதியிலேயே பாருலகை
விட்டுப் பறந்து
விட்டான் ! பாருலகம்
பார்த்து வியக்கின்ற
நாட்டிலே நடப்பதுதான்
புரியவில்லை நமக்கு !

பார் போற்றுமா ?
இல்லை பாரதத்தை
பாருயரும் பாதையிலே
பரிதவிக்க விட்டுவிடுமா ?

மனிதனே ! மனிதனே !
மனத்தால் நினை !
தன்னைப் போன்றது
தரணி என்று ! தன்னால்
உயரும் தாய்நாடு !
இதுவும் என் மனப் போராட்டம் !
---------------------------------------------
தினசரி செய்தித்தாள்களைப் பார்க்கும் போது
மனத்தில் ஏற்பட்ட எண்ணம் ........
----------------------------------------------
செல்வி ஷங்கர்