Friday, June 27, 2008

வலைப்பதிவர் சந்திப்பு - மதுரை - 25.06.2008

அன்பின் சக பதிவர்களே !!
தோழி நானானி மதுரை வருவதாக எங்க வீட்டு ரங்க்ஸ் சொன்னாங்க. நானும் உடனே கட்டாயம் சந்திக்க வேண்டுமெனக் கூறினேன். சென்ற முறை ரங்க்ஸ் மட்டும் சென்று, திருநெல்வேலி அல்வா சாப்பிட்டு விட்டு, ஒரு மணி நேரம் பேசியதாகக் கூறினார். பதிவு ஏதும் போட்டதாகத் தெரியவில்லை. இம்முறை நானும் சந்திக்க வேண்டுமெனக் கூறியதால் 25ம் தேதி காலை சென்று பேசிவிட்டு வந்து, அன்று மாலை சந்திப்புக்கு ஏற்பாடு செய்து விட்டு வந்தார். நானானியுடன் அவரது கணவரும் வந்திருந்தார்.

இச்சந்திப்பு பற்றிய எனது எண்ணங்கள் :

இந்தக்காலத்துச் சின்னப் பசங்க எல்லாம் பேசிப்பாங்கள்ள ! எங்க வூட்டுக்கு, "கெஸ்ட்" வந்துருக்காங்கன்னு - யாருன்னா "அத்தே!" ம்பாங்க. இப்போ அத்தைங்கற உறவெல்லாம் "கெஸ்ட்" ங்குற நிலைக்குப் போயிடிச்சி. அப்படித்தாங்க நாலு பேரு சந்திச்சாங்க மதுரயிலே ! அவங்க யாருன்னா - நானு, நானானி, எங்க வூட்டுக்காரரு, அவங்க வூட்டுக்காரரு ஆக நாலு பேர்.

பிள்ளைகள் சந்தித்தால் :
உனக்கு எப்போ ஸ்கூல் இல்ல காலேஜ் ?
நீ எப்ப டூர் போன ?
உனக்கு எந்த ஸ்டாரெப் பிடிக்கும் ?
யாரோட "சாங்க்" ரொம்ப இன்டெரெஸ்ட் ? ன்னு பேசுவாங்க.
ரொம்பச் சின்னவங்களா இருந்தா ஒருத்தரோட ஒருத்தர் விளையாடுவாங்க.

இளம் வயதினர் சந்தித்தால் :
தங்கள் கனவுகளைப் பேசுவார்கள் / காண்பார்கள்.

நடுத்தர் வயதினர் சந்தித்தால் :
குடும்பத்தை, குழந்தைகளை, செய்தொழிலைப் பற்றிப் பேசுவார்கள்.

பெரியவர்கள் சந்தித்தால் வாழ்க்கை பற்றிப் பேசுவார்கள்.

"நானானி" என்ற பெயரை நான் வலையில் பார்த்தபோது எனக்கு ஒன்றுமே தோன்றவில்லை. எழுத்துகளைப் படித்த போது மேலோட்டமாக ஒரு எண்ணம் மிகுந்தது. நேரிடையாகப் பார்த்த போது மதிப்பு மிக்க ஒரு தோற்றம், அமைதிப் பொலிவு, இயல்பான சொற்கள் - இதழ் உதிர்த்த போது. இலக்கியம் கற்ற ஆற்றல் - இயற்கையை, சூழ்நிலையை, குடும்பத்தை, பிள்ளைகளை, பணியை, பாசத்தை பகிர்ந்து கொண்ட உரையாடல்.

அவர்கள் தங்கி இருந்த அறைக்கதவு தட்டப்பட்டதும், சிறிது நேர இடைவெளிக்குப் பின் கதவு திறந்தது. கண்களில் மகிழ்ச்சி - இதழ்களில் புன்னகை - அமைதித் தோற்றம் அளித்த நானானி எங்களை அன்புடன் வரவேற்றார்.அந்த நேரம் அவரது கணவர் நட்பினைப் பார்க்கச் சென்றிருந்தார்.

என்ன படித்தோம் - எங்கே படித்தோம் - எப்படிப் பணியாற்றினோம் - எவ்வளவு காலம் சென்னையில் வாழ்ந்தோம் - பிள்ளைகள் வளர்ந்து, படித்து பறவையாய்ப் பறந்தது வரை பேசினோம். பேரப் பிள்ளைகள் பேசி விளையாடுவது - அவர்களின் சூழ்நிலை எல்லாம் நினைவில் நின்றது.

வலைப்பதிவில் ஒருவருக்கொருவர் முகம் தெரியா விட்டாலும், அகமகிழ்ந்து பேசிக் கொள்வதைக் கூறி மகிழ்ந்தோம். பதிவர்களின் பதிவுகள் / பின்னூட்டங்கள் படித்தால் ஒரு அமைதி கிடைக்கிறது. எத்தனையோ வேலைகளுக்கிடையில், இரவு எவ்வளவு நேரமானாலும், அந்த வலைப் பூவினைப் படிக்கையில், உரையாடும் அன்பு வலை ஒரு உற்சாக ஊக்கி என்று பேசி மகிழ்ந்தோம்.

நட்பினைக் கண்டு வந்த நானானியின் கணவரும் எங்களுடன் உரையாடி மகிழ்ந்தார். நாடு - அரசு - அலுவல் - அயல்நாடுகள் என்று கருத்து வட்டம் விரிந்து பறந்து சென்று வலைக்குள் புகுந்தது. ஒரு நல்ல மாலைப் பொழுது இனிமையாய்ப் பறந்தது.

பெற்றவர் ஓரிடம்
பிள்ளைகள் ஓரிடம்
மற்றவர் ஓரிடம்
காலம் - கலாச்சாரம் மாறுகிறது
எதிர்காலம் எப்படி என்ற சிந்தனையுடன்
மாநாடு கலைந்தது.

செல்வி ஷங்கர்
------------------

நான் எனதருமைத் தோழி நானானியை அவரது எண்ணங்களை ஒரு பதிவாகப் போட வேண்டுகிறேன்.
செ ஷ
---------









Thursday, February 21, 2008

பாப்பா ! பாப்பா !

காற்றடித்தால் சிரிக்கும் !
கைபட்டால் சிரிக்கும் !
சேர்த்தணைத்தால் சிரிக்கும்!
சிங்காரப் பாப்பா!!

தொட்டாலும் சிவக்கும்!
தேன்சிட்டாகப் பறக்கும்!
கண்பட்டால் கலங்கும்!
பண்கேட்டால் தூங்கும்!

பஞ்சாகப் பறக்கும்!
நெஞ்சம் குலுங்க
அஞ்சாது பார்க்கும்!
அதற்கென்ன தெரியும் ?
அம்மாவின் தவிப்பு!

Friday, February 8, 2008

திருவிழாவுக்குப் போவோமா !!!

மதுரை தெப்பத்திருவிழா !!
--------------------------------

சின்னங்சிறு வயதில் செல்லாமலே இருந்து விட்ட திரு விழாக்கள்! இள வயதில் செல்வதற்கே நேரமில்லாத திருவிழாக்கள்! பார்க்க வேண்டும் எனறு மனதில் நினைத்த போது "வா போகலாம்" எனற வாய்ப்பு!!

சாலையில் நடக்கும் போதெ நாற்புறமும் நடமாடும் பார்வை. பார்த்தவுடன் மனத்தில் பரவும் பரவசம். கிடைக்காமல் போன கிளர்ச்சி கிடைத்து விட்டதாய் மனம் குதிக்கின்ற குதிப்பு!

இதுவரை பார்க்காத பலூன்களா ? அதைத் தொட்டுப் பார்க்கத் தூண்டிய மனம். கட்டுக் கட்டாய், காடே வந்தது போல் அடுக்கி வைக்கப்பட்ட கரும்புகள். வெட்டிக் கொடுக்கின்ற வளைக் கரங்கள். அருகில் காசைக் கணக்குப் பார்க்கின்ற அவன்!

நிமிர்ந்து பார்த்தால் கண்கள் மலர்கின்ற மத்தாப்பூப்போல் வானத்தில் வெடிக்கின்ற வாண வேடிக்கை. கூட்டமாய்ச் செல்லுகின்ற குடும்பங்கள், குழந்தைகள், நட்பு வட்டங்கள், வயதைக் கடந்த வாழ்க்கையினர்!

ஓடுகின்ற சின்னஞ் சிறுவர்கள். கால்களை எட்டி நடை போடுகின்ற இளவயதினர்! இவர்களுக்கிடையே கண்ணில் கண்ணாடி, கரங்களைப் பற்றிய கைகள், நடப்பதற்கு மூச்சு வாங்கும் உடலை உள்ளம் ஓடு ஓடு என இசைத்துச் செல்ல, சுற்றிலும் மக்கள் கூட்டம். காவலர் நடமாட்டம். கால் வைக்க இடமில்லை. கடல் போல் சாலை. தடுத்து நிறுத்தப்பட்ட போக்குவரத்து. தெப்பத்தைச் சுற்றி மின்னொளி ! அலை அலையாய் நீர்ப் பெருக்கு குளத்தில் ! கரையோரக் கற்சுவரில் கோடு கிழித்தாற்போல் மக்கள் கூட்டம்.

யானை! இத்தனை காலங்களாயினும் மக்களுக்கு அது வியப்பு தான்! மக்கள் வெள்ளத்துக்கிடையே மலை போன்ற யானை ! சுற்றிலும் கேமரா ஒளி ! ஆம், அங்கே வெளி நாட்டார்! எல்லாமே விந்தையாய் இருந்தது அவர்களுக்கு! தெருவோரக் கடைகள்! கூடையில் கூவும் முறுக்குகள்! கொரிப்பதற்கு பொரியும் பொரி கடலையும் கண்ணாடிக் கூண்டுக்குள்! காலம் மாறி விட்ட கதை சொல்லும் பழக்கூடுக் கிண்ணங்கள் ! ஆம், வெட்டி வைக்கப்பட்ட கலவைப் பழங்கள்! இன்னும் ஆசை. கையில் எச்சி மிட்டாய் கடிகாரம் கட்ட இளைஞர்களுக்கு! மருத்துவத்தின் வளர்ச்சி! அவித்த பருப்பு வகைகள்! ஈச்சங்கிழங்கு; காலம் மாறினாலும் இன்னும் மாறாத பலகார வண்டி கண்ணாடிக் கதவுகளுடன்! சுற்றுகின்ற ராட்டினம்
விதம் விதமாய் !

அங்கங்கே கூட்டம் கூட்டமாய் குடும்பங்கள்! பக்கத்து வீட்டு நட்புடன், கையில் பையுடன், தலையில் தலைப்பாகை, வேட்டிகள் நிறைந்து நடமாட, காலத்தின் நாகரீக வளர்ச்சி கண்ணில் பட, ஜீன்ஸ், சுடிதார்
நடைபோட, இடையே வாரி முடித்த கொண்டையுடன் இடைக் கொசுவமிட்ட சேலைக் கட்டும், தலையிலே மதுரைக்கே உரிய மல்லியும் மணக்க, எல்லோர் நெற்றியிலும் திருநீறு ஒளீ வீசி குங்குமம் எட்டிப் பார்க்கும்.

நான்கு கரைகளிலும் மண் அகல் விளக்குகள் ஒளி வீச, படிக்கட்டுகள் புனிதமாய் காட்சி அளித்தன! நடுவே தெப்ப மண்டபம், ஒளி விளக்கால், கோபுரம் நான்கும் தெய்வீக ஒளி வீசியது. நடுவில் மூங்கில் தெப்பம் பூக்களால் அலங்கரிக்கப் பட்டு, அன்னை மீனாள் அருமைச் சொக்கரோடு தோன்ற, பூந்தெப்பமாய் மின்னொளியில் மிதந்தது. தேரின் வடக் கயிற்றைப் போல, இரு மடங்கு பெரிய கயிற்றால் தெப்பம் இழுக்கப் பட்டது. மக்கள் கூட்டம் வெள்ளமாய் அலை மோதியது. நேரம் செல்லச் செல்ல, பாலமோ பாதையோ கண்ணுக்குத் தெரியாதோ என எண்ணும் அளவுக்கு கூட்டம். மக்கள் அலை.

எல்லாம் சரிதான்! திருவிழாவிற்குச் சென்ற நாம் தெய்வத்தைப் பார்க்க வேண்டாமா ! கையெடுத்து, கடல் அலையாம் கூட்டத்தையே கும்பிட்டு, மனத்தில் மானசீகமாய், இறைவனையும் இறைவியையும் வணங்கி, வழி தேடி, வந்து கொண்டிருந்தோம். தெப்பம் அசைந்தாடும் இறையழகைக் கண்டு, அருள் பெற அலை அலையாய் மக்கள் கூட்டம் அசைந்தது. இச்சூழல் எல்லாம் கண்ட கண்கள் இறைவன் இறைவி தெப்பத்தில் வீற்றிருந்த திருக்கோலத்தை, மறு நாள் செய்தித் தாள்களில் தான் கண்டன.

எப்படி தெப்பத் திருவிழா !

திருவிழாவிற்குச் செல்ல தேகத்திலும் வலிமை வேண்டுமல்லவா ! கண்கள் உள்ளபோதே காட்சியை(கடவுளை)க் கண்டு விட வேண்டும். பின்னர் மனக்கண்ணிலே தான் காண முடியும் கண் தந்த கடவுளை!

காண்போமா திருவிழா!!!!

Sunday, January 27, 2008

எப்போது கற்போம் ??

பூக்களில் உறங்கும் மௌனம் ! எங்கும்
பார்க்காமலே செல்கின்ற உறவு ! இங்கு
ஏக்கங்களை வெளியிடும் பெருமூச்சு !
சின்னஞ்சிறு விரல்களின் உழைப்பு !
மொட்டுக்கள் வெடிக்காமல் மடியும்
உரிமை மறுத்து மடியும் புவியியல்!
வளர்ச்சியும் மகிழ்ச்சியும் மறுத்து
மண்ணில் நடக்கும் மனம்!
வெள்ளம் அடித்துச் சென்ற வாழ்வு
புயல் வீசிச் சென்ற பூங்கா
நிலம் அதிர்ந்து வீழ்ந்த மக்கள்
பெருமழை பேயாய்ப் பொழிந்த காலம்
வரும் வருமெனக் காத்திருந்து
வாராத கரையோரக் கனவுகள்
எல்லாம் எங்கே பேசின நம்மோடு ?
ஓடங்கள் ஓடிய ஓரங்களில் உள்ளம்
ஓய்வாகப் பார்க்கும் பார்வை! எல்லாமே
பூக்களில் உறங்கும் மௌனம் தானே!
உள்ளம் எப்போது கற்கும் அம்மொழியை ?

Saturday, January 12, 2008

உணர்ந்தால் உரையுங்கள்

காலம் ஒரே மாதிரி தான் ஒடுகிறது!
மக்கள் தான் மாறுகின்றனர்! எப்படி!
அதே இடம்! அதே செயல்!
ஆனால் மனிதர்கள் மாறுபட்டவர்கள்!
நினைத்தாலே இனிக்கின்றது நிகழ்வு!
இப்படியும் நடக்குமா? என்பதெல்லாம்
எப்படியும் ஒரு காலத்தில் நடக்கிறது!
நினைத்துப் பர்ர்க்க நேரமில்லா
ஒட்டம்! திரும்பினால் திருப்பு முனை!
கால ஒட்டத்தில் கரையேற நாம்
கடந்து வந்த பாதைகள் கவிதை
பாடுகின்றன! கடமையைச் செய்!
பயனை எதிர் பாராதே! இது கீதையின்
மொழி! இதைப் புரிந்து கொள்ள
எத்தனை காலங்கள்! விதிக்கப்
பட்டதை மாற்ற எவராலும் முடியாது!
இதுதான் இம்மொழியின் தத்துவம்!
இதை உணராத நம்மில் எத்தனை
மாற்றங்கள்! தடுமாற்றங்கள்!
தடுக்கி விழுந்ததற்குக் கூட காரணம்
அறியாத நாம் தவிப்பது ஏன்!
எப்போது உணர்வோம் இதனை?
எப்போது உணர்த்துவோம் உரிமையை?
உணர்ந்தால் உரையுங்கள்!




Wednesday, January 9, 2008

கேட்டதின் விளைவு

எதார்த்தம் வாழ்க்கை என்றால்
எதிரி கூட பொறாமைப் படுவான்!
அப்படியொரு இயக்கம் வேண்டும்.
நாம் உறுதியோடு உழைத்தால்
வியர்வை கூட இனிக்கும்.
மனம் நெகிழ்ந்தால் மயக்கும் மழலை!
மாறுபாடு தெரியாது !
எண்ணங்களின் எதிரொலி வீட்டின்
சுவர்களில் கூட ஒலிக்க வேண்டும்!
உள்ளத்தின் தூய்மை உதட்டில்
ஒளி வீச வேண்டும்! உருக்கம்
உன் செயலால் வெளிப்பட வேண்டும்!
எதையும் பார்த்து ஏமாந்து விடக் கூடாது!
ஏக்கம் கூட வெளியே தெரியக் கூடாது!
அப்படியொரு அமைதி வேண்டும்.
அமைதி ஆயிரம் தரும்.
ஆரவாரம் அதிர்ச்சியை ஏறபடுத்தும்.
அழகுணர்ச்சி அன்பில் வெளிப்பட வேண்டும்.
ஆக்கம் கண்ட போது அது அன்புப்
பெருமூச்சாய் வெளிப்பட வேண்டும்.
வெற்றிகள் இயல்பானதாகவும்
தோல்விகள் நடைமுறைகளாகவும் தோன்றினால்
துன்பங்கள் நம்மைத் தூய்மைப்படுத்தும்.
தவிப்புகள் பார்வையால் உணர்த்தப்பட வேண்டும்.
அப்போதுதான் ஒரு பண்பான
வாழ்க்கையைப் பர்ர்க்க முடியும்.
இவை இறுக்கமான மனத்திற்கு இன்னிசையாகும்.

Thursday, January 3, 2008

ஏன் ??

அழிவு ஒன்று தான் முடிவா ?
ஆற்றல் ஏன் வீணாகிறது ?
நாட்டை ஆள்வது
சுகம் என்றால்
நல்லோர் வாழ்வது சுமையா ?

நடவடிக்கை விரைந்தால்
கடைக்கோடி மனிதனும்
நலம் பெறுவானே!
நாம் மட்டும் வாழ்ந்தால் போதுமா ?

எங்கே இல்லை
குறைகள் ? எங்கே
இல்லை சுமைகள் ?
களைவதும் சுமப்பதும் சுகந்தானே !

வெற்றிகள் விளைவதில்லை
வேர்கள் பதியவேண்டும் !
குற்றங்கள் குறைய வேண்டும்
குறிக்கோள் உயரவேண்டும் !