பாரதி !
பாதி வயதில் இப்பாருலகை விட்டுச் சென்றவன். அவன் இன்னும் மீதி வயதும் வாழ்ந்திருந்தால், இந்த பாரதத்திற்கு, வீதி அமைப்பதற்குக் கூட விதி வகுத்து விட்டுச் சென்றிருப்பான் ! அந்த செந்தமிழ்த் தேனீ சிந்துக்குத் தந்தையாய் மட்டும் வாழ்ந்துவிட வில்லை ! விதியே ! விதியே ! என் செய நினைத்தாய் தமிழச் சாதியை ? எவ்வகை விதித்தாய் ? என்று தட்டி எழுப்பி, உடலும் உள்ளமும் சோர்ந்தால் மருந்துண்டு; ஆனால் செய்கையும் சீலமும் குன்றினால் உயிர் வாழ வழியில்லை ! என்று நமக்குணர்த்தியவன். தனி அறம் பாட வந்த அறிஞன் இவன் ! புதிய திறம் பாட வந்த மறவன் இவன் !
நாமிருக்கும் நாடு நமது என்று கூட அறியாத மக்களின் மூட நம்பிக்கைகளைத் தகர்ந்தெறிந்தவன். அறியாமை இருளை ஓட்டிய பாரதி, நீடு துயில் நீக்கப் பாடி வந்த நிலா ! அரண்மனை அரியணையிலும், மாட மாளிகைகளின் பஞ்சணையிலும் தூங்கிக் கிடந்த தமிழ் மொழியை, சொல் புதிது ! சுவை புதிது ! சோதிமிக்க நவகவிதை! எந்நாளும் அழியாத மாகவிதை ! என்று தெருவெல்லாம் தமிழ் முழக்கம் செய்தவன். பைந்தமிழ்த் தேர்ப்பாகன் ! சிந்துக்குத் தந்தை ! செந்தமிழ்த் தேனீ !
சாதியின் பெயரால் சண்டையிட்டுக் கொண்டு, மண்டை உடைந்து, வீதிகளிலெல்லாம் கட்டிப்புரள்கின்ற நிலையை அவன் கண்டானில்லை. சமயச் சண்டைகளைப் போக்க அறம் ஒன்றே போதும் என்று நினைத்தவன். மண்டும் மதங்கள் அண்டா நெருப்பவன். அயலார் எதிர்ப்புக்கு அணையா விளக்கவன். சாதிப்படைக்கு மருந்தவன். நம் உள்ளத்தைத் தொட்டு, உணர்வுகளைத் தூண்டுகின்ற இந்த உண்மையை அன்றைக்கு அவன் ஒருவன் தான் துணிந்து கூறினான்.
" ஆத்தி சூடி இளம்பிறை அணிந்து
மோனத் திருக்கும் முழுவெண் மேனியான் !
கருநிறம் கொண்டு பாற்கடல் மிசைகிடப்போன் !
மகமது நபிக்கு மறையருள் வித்தோன் !
ஏசுவின் தந்தை ! எனப்பலரும் உருவகத்தாலே
உணர்ந்து உரைத்திடும் தெய்வம் ஒன்றே ! "
" பாருக்குள்ளே தெய்வம் ஒன்று - இதில்
பற்பல சண்டைகள் வேண்டாம் !"
என்று தெய்வ நீதி உரைத்தவன்.
இந்த நாட்டுக் கல்விக் கொள்கையின் மீது பாரதிக்கு இணையில்லாத ஈடுபாடுண்டு. கல்வியைத் தந்தால்தான் சமுதாயம் விழிப்புறும் என்பதில் நிலையாய் நின்றான். அதிலும் பெண் கல்வி கட்டாயமாக்கப் பட வேண்டும் என்றவன் நினைத்திருந்தான். எங்கேபெண் அஞ்சி அஞ்சியே வீட்டை விட்டு வெளியே வராமல் இருந்து விடுவாளோ என்ற அச்சம் பாரதிக்கு இருந்திருக்கிறது ! அதிலும் படிப்பது பாவம் என்ற சூழ்நிலையில் பெண் கல்வி அறிவு பெறாமல் போய் விடுவாளோ என்று கலங்கி இருக்கிறான் ! அவளுக்கு வாழ்க்கை உரிமைகள் இல்லாமல் நசுக்கப் பட்டு விடுவாளோ என்று ஏங்கி இருக்கிறான். அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பதெற்கு? என்ற காலத்தில் அவன் பெண்ணறம் பேசினான். பெண் முதலில் தந்தைக்கு அடிமை ! பின் கணவனுக்கு அடிமை ! பின் மக்களுக்கு அடிமை ! என்று உரிமைகள் மறுக்கப்பட்ட காலத்தில் " தாதரென்ற நிலைமை மாறி ஆண்களோடு பெண்களும் சரி நிகர் சமானமாய் வாழ்வம் இந்த நாட்டிலே ! " என்று பெண்ணுரிமை பேசினான்.
அறம் என்பது கடமை !
அறம் என்பது கற்பு !
அறம் என்பது வாழ்க்கை !
அறம் என்பது நீதி !
அறம் என்பது வேதம் !
இவை அத்தனையையும் இந்தச் சமுதாயத்திற்குத் தந்தவன்.
கடமைகளைச் செய்யாதவன் இங்கே வாழ்தல் கூடாது. வாழ்க்கையின் நிலை கற்புடையதாக இருத்தல் வேண்டும். கற்பென்பது பெண்ணுக்கு மட்டுமல்ல ; ஆணுக்கும் உண்டு ! சமுதாயத்தில் ஆணும் பெண்ணும் ஒழுக்க நெறி தவறாது வாழல் வேண்டும் என்று வாழ்க்கை அறம் பேசியவன். சமுதாயத்தில் நீதி தலை தூக்க வேண்டும்; அநீதியால் இழைக்கப்படும் கொடுமைகள் மறைய வேண்டும்; இல்லையெனில் தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்; தர்மம் மறுபடியும் வெல்லும் என்று நீதி அறம் உரைத்தவன் பாரதி !
சட்டத்தை சட்டைப்பைக்குள் போட்டுக் கொண்டு சாதாரண மக்களை சந்திக்கு இழுக்கும் நிலை கூடாது. சட்டத்தின் முன் அனைவரும் சமம். மக்கள் ஒருவரை ஒருவர் அடித்துக் கொண்டு சாகக்கூடாது. தம்பி சற்றே மெலிவானால் அண்ணன் தானடிமை கொள்ளலாமா ? செம்புக்கும் கொம்புக்கும் அஞ்சி மக்கள் சிற்றடிமைப் படலாமா ? என்று சமுதாய ஒழூக்கம் பேசியவன் பாரதி !
இப்படி தன் பேச்சிலும் மூச்சிலும் கனவிலும் நினைவிலும் நாடு நாடென்று சிந்தித்த பாரதி இந்த நாட்டை உயர்த்துவதற்கு தனி ஒரு அறம் பாடினான் ! தன்மானத்தினை இழந்து ஒருவன் அரச வாழ்வு வாழ்வதை அறவே அவன் வெறுத்திருக்கிறான். மண்ணில் இன்பங்களை விரும்பி சுதந்திரத்தின் மாண்பினை இழப்பரோ ? கண்ணிரண்டும் விற்றுச் சித்திரம் வாங்கினால் கை கொட்டிச் சிரியாரோ ? என்றான்.
வணக்கத்திற்குரியது தாய்நாடு ! அதை வணங்கு ! வாழ்த்து ! ஒற்றுமை கொள் ! என்பதே அவன் உரைத்த அரசியல் அறம் ! இது புதுமை இல்லையா ? இப்படி நாட்டின் எதிர்கால அரசியலைப் பற்றி நாட்டுப்பற்று உள்ள ஒரு உண்மைக் குடிமகனாக நின்று சிந்தித்த அவன் சிந்தனை போற்றுதற்குரியது அல்லவா ? !
செல்வி ஷங்கர் - 20082008