Sunday, July 27, 2008

விரைவாய் வந்த வெண்பா !

பாட்டெழுதும் நேரமா ? இங்கே பசுமரத்தின்
காய்கறிகள் காலத்தில் வேக ! கனிவான
நேரத்தில் காண்கின்ற காட்சிகள் கார்போல்
கவிதையாய் வந்தன காண் !
======================================
மலையான வாழ்வில் மனத்தின் நிழல்போல்
நிலையாத நீராய் நினைவிலே ஓடும் !
விலையான பொருளுக்கு வேர்போல் ஆகும் !
கலையாத காலைப் பொழுது !
==============================================
சொல்லாத சொல்லுக்கு நீதுணை ! ஏனடி ?
கல்லாக நின்றாய் ! கனிவாய்நான் பேசும்
முன்பாக ! கன்றுகள் கண்போல் உனையே
அன்பாகப் பார்த்த கால் !
====================================================
மனதுக்குள் மாய்கின்ற மானே ! முளைத்த
விதைதானே மேலும் கிளைத்தது ! ஏனோ
படர்ந்ததோர் பந்தலாய் பாய்விரிய சேய்கள்
மனம்பார்க்க பூத்தது ஏன் ?
=========================================
பாட்டெழுதும் நேரமா இங்கே ! பரிதவிக்கும்
கூட்டுக் குருவிகள் கூடியொன்றாய் ஆடி
மகிழ அழகான மேடை எதுவெனவே
தேடுவதைக் காண்மகளே காண் !
=================================

செல்வி ஷங்கர்

12 comments:

செல்விஷங்கர் said...

படித்துத் தான் பாருங்களேன்

இப்னு ஹம்துன் said...

வெண்பா எனக்கண்டு ஓடோடி வந்திட
நண்பரின் வெண்பா நயமே - இன்புறவே
இத்தனை வெண்பா எழுதிய உங்களின்
வித்தைகள் காண வியப்பு!

செல்விஷங்கர் said...

இப்னு ஹம்துன்

வெண்பா எனக்கேட்டதும், ஒண்பா ஆயிற்றே ! எப்படி நடைமுறையில் ?
என்று நினைத்தேன். எழுத்துகள் சொல்லாக, சொல் பா வடிவம் பெற்றது. சுவைக்குமா சுவைக்காதா எனத் தெரியவில்லை. அதனால் பார்வையாளரை அழைத்தேன். வருகைக்கு நன்றி

செல்விஷங்கர் said...

வெண்பாவிற்கு பதில் வெண்பா - பாராட்டுகள்

அகரம் அமுதா said...

முதல் வெண்பா மிகவும் அழகாகவும் அருமையாகவும் உள்ளது. பின்வரும் வெண்பாக்கள் சில இடங்களில் பொருட்சிதைவுள்ளதைப்போல் உணர்கிறேன். (இது என்கருத்து)

தளை சிதையாமல் எழுதப்பழகுமாறு வேண்டுகிறேன். வாழ்த்துகள்.

இப்னு! புணர்ச்சி விகுதியை நன்கு கவனிக்கவும். தளைதட்டுகிறது. "வெண்பா எனக்கண்டு + ஓடோடி வந்திட" = "வெண்பா எனக்கண் டோடோடி வந்திட" எனப்புணர்ந்துத் தளைதட்டுவதைக் கவனிக்கவும்.

Iyappan Krishnan said...

// செல்விஷங்கர் said...

படித்துத் தான் பாருங்களேன்//


**
அருவியெனக் கொட்டியும் ஆறாகவும் ஓடி
தருமின்பம் தரும்நிதம்வெண் பா
**

வெண்பாவில் நற்கவிதை நாள்தோறும் கேட்டிட
தண்சோலை நற்சுகம் தான்!
**

செல்விஷங்கர் said...

அகரம் அமுதா - வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

செல்விஷங்கர் said...

ஜீவ்ஸ்,

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி - குறள் வெண்பா அருமை. அகரம் அமுதா தளைகளைக் கவனிக்கட்டும்.

Iyappan Krishnan said...

//அருவியெனக் கொட்டியும் ஆறாகவும்* ஓடி
தருமின்பம் *தரும்நிதம்வெண் பா //

தலையிலே நல்லா தட்டிடுச்சு.



அப்புறமா சரி பண்றேன். தவறுக்கு மன்னிச்சுக்கோங்க ( :(( )

NewBee said...

//இத்தனை வெண்பா எழுதிய உங்களின்
வித்தைகள் காண வியப்பு!
//

மறுக்கா சொல்லேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்! :)

செல்விஷங்கர் said...

ஜீவ்ஸ்

தளை தட்டுவது இயல்பு. ஆனால் இலக்கணம் நம்மை நிலையாய் நிறுத்தி விடும். சொல்லிருந்தால் பொருளில்லை - பொருளிருந்தால் யாப்பில்லை என்கிற போது இலக்கணம் இனிக்க மறுக்கிறது.

தவறுகள் சுட்டப்படும் போது திருத்த ஒரு வாய்ப்பு உள்ளதே என மகிழலாம்.

செல்விஷங்கர் said...

புது வண்டே

மறுக்காக் சொல்லிட்டேயா ??

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி