Saturday, December 22, 2007

பூக்களில் உறங்கும் மவுனம்.

என் பாக்களில் காணும் ஏக்கம்!
உன் எண்ணங்களால் வந்த தாக்கம்!
சுற்றி உள்ளவர்களைப் பார்த்தேன் ஆம்!
சுவர்போல் உணர்ந்தேன் அவர் பார்வையை!

மாறாதது உலகம் என்றார்கள்! இல்லை!
மாற்ற முடியாது இந்த மனிதர்களை!
சொல்வது போல் செய்ய வில்லையே!
சுயநலந்தான் சுற்றிச் சுற்றி வருகிறதே!

காசு கொடுத்தால் கூட கனிவாகப்பேச
காலநேரம் பார்ப்பர்! சொற்கள் சுடுகின்றனவே!
என்ன வந்து விடப் போகிறது!
இவர்களின் இன் முகப் பார்வையில்!

புரிய வில்லையே! இந்த புதிர்போடும்
மனிதர்க்கு! புன்னகைப் பூக்களைப் பூத்தாலென்ன!
புவி என்ன சாய்ந்தா போகும்!
அன்பாகச் செய்தால் அது பண்புதானே!

ஆலயம் சென்றா அறத்தைச் செய்யவேண்டும்!
மனமே மாபெரும் கோவில்! அங்கே
மாண்புறு எண்ணங்களே ஒளி விளக்கு!
மாறாத நினைவுகளே மாண்புடையான் வழிபாடு!

மாபெரும் உலகத்தை மண்ணில் வாழவிடுவோம்!
மாந்தருக்குள் அன்பு செய்வோம்! இங்கே
மழலையரை மாந்தர்களாய் ஆக்குவோம்! இனி
பூக்களில் உறங்கும் மவுனங்கள் போதும்!

புதுமலராய் புன்னகைப்போம்! புவிவாழ பூங்கா
வனம் அமைப்போம்! புதுமணம் பரவட்டும்!
பூக்கள் மலரட்டும்! பாக்கள் பேசட்டும்!
அதில் ஆக்குவோம் அன்பு வலையை!

செல்விஷங்கர்
22.12.2007

Wednesday, December 5, 2007

உலகம் இவ்வளவு தான்

காலம் கடந்த பின் தான் அதன் அருமை புரியும். நினைத்துப் பார்க்க நேரமில்லாமல் ஓடிய காலங்களை இப்பொழுது நம் மனத் திரையில் கொண்டு வந்தால் அது நம்மைப் பார்த்து நகைக்கும். என்ன ஓய்வா ? என்று! சுற்றிச் சுற்றி சுழன்ற கால்கள் இன்று சுகமாக நடைபோடுகின்றன. அது எப்படி வந்தது இந்த மன நிறைவு! சுற்றும் உலகம் ஒரு நொடி நின்றால் தெரியும் !

புத்தன் கூட ஆசைப்பட்டானாம். உயிர்கள் துன்பப்படக் கூடாதென்று!
ஆசையைத் துறப்பதற்கு மனம் எளிதில் துணியாது. பற்றினை விடுவதற்கு பற்றற்றவனின் பாதங்களைப் பற்றுக என்கிறான் வான்மறை புலவனும். ஆசைகள் எப்படி நம்மை விட்டு அகல்கின்றன? அலை மோதும் நீரின் சுழற்சி போல் நம் எண்ண அலைகள் கரை மோதுகின்றன.

நினைத்துப் பார்த்தால் உலகம் இவ்வளவுதான். அதில் ஏன் இத்தனை மோதல்கள்? இயற்கையை வளர மறுக்கும் சூழல்கள் ! ஏழை வாழ்ந்தால் என்ன? எதற்காக அவன் வசதிகளை வாய்ப்புள்ளோர் சுரண்ட வேண்டும்?

நடக்கும் தொழில் ஊழல் ஏன்? அது நடந்தால் என்ன? நாடு நலம் பெற வேண்டாமா? ஏன் திட்டங்கள் செயல்களாக மறுக்கின்றன! மறைக்கின்ற மனிதர்கள் மனந் திருந்துவார்களா? கொதிக்கின்றனர் குறைபாடுடை யவர்கள். அந்த ஏழைகளின் வாழ்வு மலர வேண்டாமா? ஏற்றமுடையோர் இயல்பாகச் செயல் பட்டால் என்ன ? அந்தச் செம்மையுடை யோருக்காகத் தானே இந்த உலகம் இத்தனையும் தாங்கிக் கொண்டிருக்கிறது! எதிர்த்து ஒரு வார்த்தை கேட்பதில்லை! இதைப் புரிந்து கொண்டாவது நாம் செயல் படக் கூடாதா?

நலிந்தோரை நலமாக நடமாட விடுவோம்!
நாட்டின் பயன்கள் அவர்களைச் சென்றடையட்டும் !

வளமான நாடு உருவாகட்டும்!!!!