Saturday, December 27, 2008

இயற்கை மாற்றம் .......... !

மாலைக் கதிரவனே !
அப்படி என்ன மகிழ்ச்சி ?
மார்கழி மாலையில்
மகிழ்வாய்த் தோன்றுகிறாய் !

வட்டமிட்டு வரைந்தாற்போல்
கார்மேகக் கூட்டத்தில்
கலைநயமாய்க் காண்கின்றாய் !

செக்கச் சிவந்த
செந்தனலாய் ! சிதறாமல்
அள்ளி வைத்த தீப்பந்தாய் !
விரிந்த வானத்தின்
வீதிகள் நடுவே
திட்டமிட்டு இட்ட
திலகமே நீ !

கட்டிடச் சுவரில்
காக்கைப் பள்ளிக்கூடம் !
கலைந்த மேகங்கள் !
களையாக நடுவில் நீ !
கரும் பச்சை இலைகள் !
காற்றில் சலசலக்கும்
தென்னங்கீற்றுகள் !
கவின் மாலைப் பொழுதின்
காவியமாய் நீ !
மலைகளின் மடியில்
மகிழ் வட்டம் !

பனிக்காற்று பார்வை பட்டு
பரவசமாய்ப் பறவைக் கூட்டம் !
கூட்டுக்குச் செல்லும் குதூகலத்தில்
வரிக்கோடாய் வானில்
சிறகடித்துச் சிலிர்க்கும்
சின்னஞ்சிறு பறவைகள் !

தீர்க்கமாய்ப் பார்க்கின்ற
பார்வையில் பரவசமாய்
பரந்து கிடக்கும் இயற்கை !
பருவ மழையின் பசுமை !

எப்படி நிகழ்ந்தது ?
எப்படி நிகழ்ந்தது !
இந்த இயற்கையின் மாற்றம் !
----------------------------
செல்வி ஷங்கர்
----------------------------

Wednesday, December 17, 2008

பாடம் படிக்குமா உலகம் ?

உதித்தான் கதிரவன் கிழக்கில்
உயிர்த்தெழுந்தது உலகம் !
ஒளியைப் பதித்தான் எங்கும்
விழியைப் பெற்றது உலகு !
வளியை வளைத்தது வானம் !
வனத்தை வளர்த்தது உன்னொளி !
வானம் எங்கும் ஊர்ந்தாய் !
மானம் காக்க மனிதன்
மாண்புறு தொழில் செய்தான்.
உதய சூரியனே நீ
நாளும் உதிக்கின்றாய் !
உன்னத உலகை
ஒளியால் படைக்கின்றாய் !
உன்னை யார் கேட்டார்
உதியென்று ?
ஒழுங்காய் ஒளி பரப்ப
யார் பணித்தார் ?
ஏனென்று கேட்பார்
இல்லையே ! இருந்தும்
செய்கின்றாய் கடமையை !
நேரத்தில் செய்கின்றாய் !
காலத்தில் சிறக்கின்றாய் !
தட்டிக் கொடுப்பார் இல்லை !
தட்டிக் கேட்பார் இல்லை !
தானே செய்கின்றாய் !
சரியாய்ச் செய்கின்றாய் !
உலகம் படிக்குமா பாடம் உன்னிடம் !!!

Tuesday, December 16, 2008

தென்றல் புயலாய் மாறியதேனோ ??????

மழையில் குடையாய்
வெயிலில் நிழலாய்
நினைவில் நிகழ்வாய்
சோதனையில் வழியாய்
சாதனையில் மகிழ்வாய்
போதனையில் பொறுப்பாய்
பாதையில் பலமாய்
தேவையில் நினைவாய்
செயலில் பொருளாய்
ஆற்றிய கடமை
அருமை மக்களாய்
அவிழரும்பானதே !

மணக்கும் மணத்தை
மலரில் அடக்கிய
மலர்ப்பந்தலாய்
மனத்தை மயக்கிய
மலர்களே !

மாற்றம் ஏனோ ?

மலர்களே ! மலர்களே!

குற்றம் பார்க்கின்
சுற்றம் இல்லை !

சிறியோர் எல்லாம்
சிறியரும் அல்லர் !
பெரியோர் எல்லாம்
பெரியரும் அல்லர் !
செயலால் உயர்க !

செல்வங்களே !!
-----------------------------------------

செல்வி ஷங்கர்
Saturday, December 13, 2008

ஓய்வு !

கஞ்சி குடித்த
களைப்பில்
கட்டாந்தரையில்
தூக்கம் !
மடித்த கையே
தலையணை !
கண்ணில் உறக்கம்
கடல்போல் !
காத்திருந்தது
கட்டட வேலை !

Friday, December 12, 2008

ஒரு மழைக்கால மாலை !!!

ஒரு மழைக்கால மாலைப் பொழுதில், எங்கள் வீட்டு மொட்டை மாடியில் நின்று சுற்று முற்றும் பார்த்த போது மனத்தில் தோன்றிய கவிதை.

ஒரு பக்கம் - மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கோபுரங்கள்
மறு பக்கம் வைகையாற்றுப் பாலம்
இடையே எங்கள் அடுக்கு மாடிக் கட்டடங்கள்

நான்காம் மாடியில் நடந்த கட்டட வேலைக்கு
கீழ்த்தளத்திலிருந்த மணல் அனைத்தும் நொடியில்
மேலே கொண்டு செல்லப்பட்டது.

இவை அனைத்தையும் கண்ட கண்களின் காட்சி இது.
----------------------------------------------------------------------
சூழ்ந்த மேகங்கள்
தவழும் கோபுரங்கள்
சுற்றிலும் மரங்கள்
வீசிடும் காற்று
சுழன்றிடும் சூழல் !

பளிச்சென்ற கட்டிடங்கள்
பார்க்கவே அழகாய் !
கோடு போட்டாற்போல்
பாலம் ! அதிலே
புள்ளிகளாய் மக்கள் !
போகின்ற பேருந்துகள் !

கொட்டிக் கிடந்த
மணலெல்லாம்
குவியல் குவியலாய்
மாடித்தளத்தில் !
மனிதனின் உழைப்பு !

ஆற்றோரப் பாலம்
அங்கே வண்டிகளின்
பேரிரைச்சல் !

போவோர்
வருவோர்
எல்லாம்
ஓரத்தில் !
--------------------------------
செல்வி ஷங்கர்