Thursday, February 21, 2008

பாப்பா ! பாப்பா !

காற்றடித்தால் சிரிக்கும் !
கைபட்டால் சிரிக்கும் !
சேர்த்தணைத்தால் சிரிக்கும்!
சிங்காரப் பாப்பா!!

தொட்டாலும் சிவக்கும்!
தேன்சிட்டாகப் பறக்கும்!
கண்பட்டால் கலங்கும்!
பண்கேட்டால் தூங்கும்!

பஞ்சாகப் பறக்கும்!
நெஞ்சம் குலுங்க
அஞ்சாது பார்க்கும்!
அதற்கென்ன தெரியும் ?
அம்மாவின் தவிப்பு!

Friday, February 8, 2008

திருவிழாவுக்குப் போவோமா !!!

மதுரை தெப்பத்திருவிழா !!
--------------------------------

சின்னங்சிறு வயதில் செல்லாமலே இருந்து விட்ட திரு விழாக்கள்! இள வயதில் செல்வதற்கே நேரமில்லாத திருவிழாக்கள்! பார்க்க வேண்டும் எனறு மனதில் நினைத்த போது "வா போகலாம்" எனற வாய்ப்பு!!

சாலையில் நடக்கும் போதெ நாற்புறமும் நடமாடும் பார்வை. பார்த்தவுடன் மனத்தில் பரவும் பரவசம். கிடைக்காமல் போன கிளர்ச்சி கிடைத்து விட்டதாய் மனம் குதிக்கின்ற குதிப்பு!

இதுவரை பார்க்காத பலூன்களா ? அதைத் தொட்டுப் பார்க்கத் தூண்டிய மனம். கட்டுக் கட்டாய், காடே வந்தது போல் அடுக்கி வைக்கப்பட்ட கரும்புகள். வெட்டிக் கொடுக்கின்ற வளைக் கரங்கள். அருகில் காசைக் கணக்குப் பார்க்கின்ற அவன்!

நிமிர்ந்து பார்த்தால் கண்கள் மலர்கின்ற மத்தாப்பூப்போல் வானத்தில் வெடிக்கின்ற வாண வேடிக்கை. கூட்டமாய்ச் செல்லுகின்ற குடும்பங்கள், குழந்தைகள், நட்பு வட்டங்கள், வயதைக் கடந்த வாழ்க்கையினர்!

ஓடுகின்ற சின்னஞ் சிறுவர்கள். கால்களை எட்டி நடை போடுகின்ற இளவயதினர்! இவர்களுக்கிடையே கண்ணில் கண்ணாடி, கரங்களைப் பற்றிய கைகள், நடப்பதற்கு மூச்சு வாங்கும் உடலை உள்ளம் ஓடு ஓடு என இசைத்துச் செல்ல, சுற்றிலும் மக்கள் கூட்டம். காவலர் நடமாட்டம். கால் வைக்க இடமில்லை. கடல் போல் சாலை. தடுத்து நிறுத்தப்பட்ட போக்குவரத்து. தெப்பத்தைச் சுற்றி மின்னொளி ! அலை அலையாய் நீர்ப் பெருக்கு குளத்தில் ! கரையோரக் கற்சுவரில் கோடு கிழித்தாற்போல் மக்கள் கூட்டம்.

யானை! இத்தனை காலங்களாயினும் மக்களுக்கு அது வியப்பு தான்! மக்கள் வெள்ளத்துக்கிடையே மலை போன்ற யானை ! சுற்றிலும் கேமரா ஒளி ! ஆம், அங்கே வெளி நாட்டார்! எல்லாமே விந்தையாய் இருந்தது அவர்களுக்கு! தெருவோரக் கடைகள்! கூடையில் கூவும் முறுக்குகள்! கொரிப்பதற்கு பொரியும் பொரி கடலையும் கண்ணாடிக் கூண்டுக்குள்! காலம் மாறி விட்ட கதை சொல்லும் பழக்கூடுக் கிண்ணங்கள் ! ஆம், வெட்டி வைக்கப்பட்ட கலவைப் பழங்கள்! இன்னும் ஆசை. கையில் எச்சி மிட்டாய் கடிகாரம் கட்ட இளைஞர்களுக்கு! மருத்துவத்தின் வளர்ச்சி! அவித்த பருப்பு வகைகள்! ஈச்சங்கிழங்கு; காலம் மாறினாலும் இன்னும் மாறாத பலகார வண்டி கண்ணாடிக் கதவுகளுடன்! சுற்றுகின்ற ராட்டினம்
விதம் விதமாய் !

அங்கங்கே கூட்டம் கூட்டமாய் குடும்பங்கள்! பக்கத்து வீட்டு நட்புடன், கையில் பையுடன், தலையில் தலைப்பாகை, வேட்டிகள் நிறைந்து நடமாட, காலத்தின் நாகரீக வளர்ச்சி கண்ணில் பட, ஜீன்ஸ், சுடிதார்
நடைபோட, இடையே வாரி முடித்த கொண்டையுடன் இடைக் கொசுவமிட்ட சேலைக் கட்டும், தலையிலே மதுரைக்கே உரிய மல்லியும் மணக்க, எல்லோர் நெற்றியிலும் திருநீறு ஒளீ வீசி குங்குமம் எட்டிப் பார்க்கும்.

நான்கு கரைகளிலும் மண் அகல் விளக்குகள் ஒளி வீச, படிக்கட்டுகள் புனிதமாய் காட்சி அளித்தன! நடுவே தெப்ப மண்டபம், ஒளி விளக்கால், கோபுரம் நான்கும் தெய்வீக ஒளி வீசியது. நடுவில் மூங்கில் தெப்பம் பூக்களால் அலங்கரிக்கப் பட்டு, அன்னை மீனாள் அருமைச் சொக்கரோடு தோன்ற, பூந்தெப்பமாய் மின்னொளியில் மிதந்தது. தேரின் வடக் கயிற்றைப் போல, இரு மடங்கு பெரிய கயிற்றால் தெப்பம் இழுக்கப் பட்டது. மக்கள் கூட்டம் வெள்ளமாய் அலை மோதியது. நேரம் செல்லச் செல்ல, பாலமோ பாதையோ கண்ணுக்குத் தெரியாதோ என எண்ணும் அளவுக்கு கூட்டம். மக்கள் அலை.

எல்லாம் சரிதான்! திருவிழாவிற்குச் சென்ற நாம் தெய்வத்தைப் பார்க்க வேண்டாமா ! கையெடுத்து, கடல் அலையாம் கூட்டத்தையே கும்பிட்டு, மனத்தில் மானசீகமாய், இறைவனையும் இறைவியையும் வணங்கி, வழி தேடி, வந்து கொண்டிருந்தோம். தெப்பம் அசைந்தாடும் இறையழகைக் கண்டு, அருள் பெற அலை அலையாய் மக்கள் கூட்டம் அசைந்தது. இச்சூழல் எல்லாம் கண்ட கண்கள் இறைவன் இறைவி தெப்பத்தில் வீற்றிருந்த திருக்கோலத்தை, மறு நாள் செய்தித் தாள்களில் தான் கண்டன.

எப்படி தெப்பத் திருவிழா !

திருவிழாவிற்குச் செல்ல தேகத்திலும் வலிமை வேண்டுமல்லவா ! கண்கள் உள்ளபோதே காட்சியை(கடவுளை)க் கண்டு விட வேண்டும். பின்னர் மனக்கண்ணிலே தான் காண முடியும் கண் தந்த கடவுளை!

காண்போமா திருவிழா!!!!