Monday, October 14, 2013

நாம் சிரிக்கும் நாளே திருநாள் !

தலைப்பு : நாம் சிரிக்கும் நாளே திருநாள்  !

கன்னங் குழியச் சிரிக்கும் கவின் நிலவு
கைப் பிடித்து நடக்கின்ற குழந்தை !

வில்லாக வளைந்து விரல்வித்தை காட்டும் 
பள்ளிப் பருவத்து பசும்பொன் பதுமை ! 

கண்ணில் தெரிகின்ற வண்ணப் பாடல்கள் 
காதில் இனிக்கின்ற வளரிளம் பருவம் ! 

கணக்கீடு தவறாமல் கூட்டிக் கழிக்கும் 
கடும் உழைப்புக் காலங்கள் !

மனம் விட்டுப் பேசி வாய் விட்டுச் சிரித்து 
மகிழ்ந்திருக்கும் நேரங்கள் மனசுக்குள் மத்தாப்பு !

கண்ணெல்லாம் மகிழ கவின் படைப்பில் !
கருத்தெல்லாம் கசிந்துருகும் காவியங்கள் !  

சிந்தை எல்லாம் இனிக்கின்ற தீம்பாடல்கள் 
செவிகளிலே ஒலிக்கின்ற தேன் மொழிகள் ! 

ஒன்றாக ஒலிக்கும் ஒற்றுமைக் குரல்கள் 
நன்றாக வாழ்கின்ற நானில மக்கள் !

அன்பொன்றே பொருளாய் அகமுழுதும் 
மகிழ்கின்ற இல்லறப் பூங்கா ! 

இவரெல்லாம் நடமாடும் நானிலமே 
நமக்கு நல்வாழ்வுப் பூங்கா !

இவையெண்ணி !  நாமெல்லாம்  மனந்திறந்து
சிரிக்கும் நாளே நமக்குத் திருநாளாகும் ! 


செல்வி ஷங்கர்
14.10.2013 திங்கட்கிழமை 

ஓய்வு !

கஞ்சி குடித்த

களைப்பில்

கட்டாந்தரையில்

தூக்கம் !

மடித்த கையே

தலையணை !


Friday, June 14, 2013

வெள்ளை மனத்திற்கு வேர்கள்

வெண் முத்துக்களாய் சிதறுகின்றன 
எங்கெங்கோ செல்லும் மேகங்கள் !

மின்னும் விண்மீன்கள் கதிர்பரப்பும் 
கார்மேகத்தை கண்சிமிட்டி அழைக்கின்றன !

காரிருளில் வானம் ஒளிபரப்பும்
வண்ணக் கோலங்கள் இவை !

வெள்ளை மனமாய் விரிந்து
கிடக்கின்றன சிந்தனைப் பூக்கள் !

சிதறும் மழைத்துளிகள் மண்ணைக் 
காண மறுக்குமா ? கண்ணைக் 
காக்கும் இமையல்லவா நீர்த்துளிகள் !

சிந்தாமல் சிதறாமல் சிறுவிரல்கள் 
அள்ளுகின்ற மணல் பரப்பாய்
எண்ணங்கள் எழுந்தாடும் எங்கும் !

வெட்ட வெளியில் நட்ட மரங்கள்
நாளும் சிந்தும் சிறுபூக்கள் !
வெள்ளை மனத்திற்கு வேர்களாய் !
சிதறுகின்ற பனித்துளியாய் சிந்தனைக்
காற்று ! மனத்தில் மட்டுமல்ல 
மனிதத்திலும் பூத்துக் குலுங்கும், !


கவிதை ஆக்கம் : செல்வி ஷங்கர்
14.06.2013 






Sunday, October 14, 2012

இன்று ஞாயிற்றுக் கிழமை ........... !!!! ( 14.10.2012 ) 

மதுரை வாசகர் வட்டத்தில் ஒரே சிரிப்பு மழை. அலை அலையாய் கருத்து அலைகள் முட்டி மோத - கொட்டிய வானம் போல் ஆங்காங்கே கருத்துரைகள். சிந்திக்க சிந்திக்க சிரிப்பலைகள். பேராசிரியர் கு.ஞானசம்பந்தன் அவர்களின் நகைச்சுவை உரையை நேரடியாகக் கேட்டது இதுதான் முதல் முறை.  

சிற்றூருக்குப் பேருந்து ஏறி - சிரிக்கச் சிரிக்கப் பேசி -  இறக்கி விடப்பட்ட கதையைக் கேட்ட போது நாமும் பேருந்துப் பயணம் சென்றோம். இரயிலில் ஏறி அக்கம் பக்கம் அமர்ந்திருப்போர் இறுக்கமான முகத்துடன் ஏற இறங்கப் பார்த்த போது , அங்கே இங்கே பேசி கலகலப்பாக்கிய காட்சி  நம்மையும் இரயிலில் ஏற்றி விட்டது.  

படிச்சோமா ! மறந்தோமா ! என்று விட்ட பாடத்தை எல்லாம் நகைச் சுவையில் கொண்டு வந்து நளினமாக நாவில் நடனமாட விட்டார். சிரித்தது ராமனா - திட்டியது சூர்ப்பனகையா - தன்னை விட நல்லவன் இலக்குவனா -  என்று கம்ப ராமாயணக் காட்சியைக் களத்தில் கொண்டு வந்து காலத்தில் கருத்துரைத்தார். 

படிப்பது பாரதமா என்றறியாமலே பாரதக் கதையை பாங்காய் உரைத்து, அர்ச்சுணன் அசந்து நிற்க, ஆயுதமெடுத்துக் கண்ணன் முன்னேற, பிதாமகர் பதைபதைத்து வந்து நினைவூட்டும் சபதத்தை - கருத்தாய் நகைச் சுவையாய் காலத்திற்கேற்ப உரைத்தார்.  

மகிழ்வாய்ச் சிந்திக்க - மகிழ்ச்சியாய்ப் பார்க்க - நாமிருக்கும் இடமே மகிழ்வு மன்றமாகும். நல்ல சிந்தனை,  நல்ல செயல்,  நற்கருத்துகள்  சூழ்ந்திருக்க்கும் இடங்களில் கருத்தலைகள் ( வைஃப்ரேஷன் ) நம்மையும் மகிழ வைக்கும். மனத்தில் புத்துணர்ச்சியை ஏற்படுத்தும் என்று விவாகனந்தரையும் புத்தரையும் நம் கண் முன்னே கருத்தாய்க் கொண்டு வந்தார். 

நல்லாருந்தது - ரொம்ப ரொம்ப நல்லாருந்தது - ஆனா எப்படி நல்லாருந்தது அப்படின்னு சொல்லப் போனா - அங்கே தான் அது எவ்வளவு கஷ்டங்கறது நினைவுக்கு வந்தது. அவரும் அதைத்தான் சொன்னார்- நகைச்சுவையாகப் பேசுவதென்பது அவ்வளவு எளிதல்ல - பாடுபட்டு அதை வழக்கத்தில கொண்டு வருவதுலதான் இருக்குன்னு சொன்னார். 

அப்பதான் தெரிஞ்சுது - அவர் எவ்வளவு பெரிய மனிதர் - எத்தகைய சிந்தனைவாதி - எப்படி எல்லாம் பாடுபட்டு படிப்படியாய் தன்னை  ஊர் உலகமெல்லாம் அறியும்படி உயர்த்திக் கொண்டிருக்கிறார் என்பது.  உண்மையில் இந்த மதுரை மண்ணின் மைந்தரவர் என்பது அவரது நகைச்சுவை உரையால் நன்குணர முடிந்தது.

கேட்ட போது சிரித்து மகிழ்ந்த எனக்கு எழுதும் போது அந்த உணர்வை அப்படியே தர இயலவில்லையே என்று தோன்றுகிறது.

செல்வி ஷங்கர் @ மெய்யம்மை



Monday, June 25, 2012

இனிய மாலைக் காற்று

மாலை நேரக் காற்று
மகிழ்வாய் வீசும் ! பாடும்
குயில்கள் பறந்து செல்லும் !
புறாக்கள் பதுங்கும் மாடங்கள் !
மலை சூழ்ந்த மரங்கள் !
வானம் தொடும் மலைகள் !
இன்னும் இருக்கிறது இயற்கை !
இங்கே வீசும் காற்று
எங்கும் வீச வேண்டாமா ?
கிராமம் சூழ்ந்த நகரம் !
வளரும் கல்வி ! வாழும்
தொழில் ! எல்லாம் இங்கே !
ஏனோ மறந்தனர் மக்கள்
நாளும் காக்க இயற்கையை !


செல்வி ஷங்கர்

Saturday, June 23, 2012

காசிக்குப் போன கணபதி

மதுரை ஸ்ரீ ஸத்குரு சங்கீத சமாஜம் வழங்கிய நந்தன நவரச நாடக விழாவில், 22.06.12 அன்று சென்னை நவ பாரத் வழங்கிய, கலை மாமணி கூத்த பிரான் நடித்த “காசிக்குப் போன கணபதி” நாடகத்தினைப் பார்க்கும் வாய்ப்புக் கிடைத்தது. அதனைப் பற்றிய ஒரு கண்ணோட்டம்.

ஒரு இனிய மாலைப் பொழுதில் நீண்ட நாட்களுக்குப் பிறகு பார்த்த மேடை நாடகம். இயல்பான நடிப்பால் பாத்திரத்தை நம் மனத்தில் பதித்த நடிகர்கள் ! நல்ல மொழி நடை கருத்தை விளக்கத் துணை செயதது. நடிகர்கள் நாடகப் பாத்திரமாகவே மாறினர்.

பொய் சொல்லக் கூடாது ! மறந்தும் உண்மையை மறைக்கக் கூடாது ! இதனை ஒழுங்காய்ச் செய்தாலே போதும் ! இறைவனைத் தேடி எங்கும் அலைய வேண்டாம் ! கோவில் குளங்களைத் தேட வேண்டாம் ! உறவுகள் உண்மையாய் இருக்க வேண்டும் ! அன்பு மறைக்கப்படக் கூடாது ! ஒழுங்காய்ச் செய்யும் செயல்களே வழிபாடு ! காசிக்குப் போவது எளிதல்ல ! ஏதோ காசு பணம் சேர்ந்திருந்தால் செல்லும் சுற்றுலா அல்ல அது ! இறைவன் நினைத்தால் தான் நாம் செல்ல முடியும் ! இருந்த இடத்தில் இருந்தே இறைவனை நினைத்தால் அது காசி ! வாழ்க்கையில் நம்மோடு வளரும் சினத்தை விட்டு விடுதலே சிறந்த விரதம் ! நல்லவற்றை நினைத்து நல்லவற்றைச் செய்தலே நன்மை தரும் அறம் ! அதை விட இனியது வேறொன்றுமில்லை ! நல்ல நாடகம் ! நகைச்சுவை ததும்பும் நற்கருத்து ! மக்களே பாத்திரப் படைப்புகள் ! மனத்தை இயக்கும் இயங்கு தசைகள் ! மாலைப்பொழுதை நல்ல பொழுதாக்கிய நாடகம் இந்த “காசிக்குப் போன கணபதி” !.

செல்வி ஷங்கர்

Tuesday, December 27, 2011

நீரில் பகையும் உண்டோ !

நீரில் பகையும் உண்டோ !
-------------------------------------

விருந்தினன் நட்டான் ஒரு மரம் !
அருந்தி மகிழும் அமுதாய் !
மருந்தின் மிக்க கனிகள்
நாளும் தந்தது நல்லுயிர் வாழ !
நாடும் மக்களும் மகிழ்ந்தனர் !

காலம் சென்றது காற்றாய் !
மரமும் வளர்ந்தது மண்ணில் !
காய்த்துக் குலுங்கிய கிளைகள் !
கனிந்து மணந்த கனிகள் !
சுவைத்து மகிழ்ந்த மக்கள் !

சூறாவளியாய் வந்தது ஒர்புயல் !
சுற்றுச் சூழல் பொங்கி எழுந்தது !
இல்லாததை இருப்பதாய் ஓர் கதை !
கதைக்குக் கண்ணும் காதும் முளைத்தது !
உதைக்கும் கால்கள் ஓடி வந்தன !

நியாயத்தை நீதியை நேர்மையை
எங்கே விற்றனர் மாந்தர் ?
பொய்யை விதைக்க பூகம்பம்
வந்தது ! பூர்வீகம் சொல்லும்
கதைகள் கருத்தை மறைத்தன !

நீரும் நிலமும் இயற்கை !
காற்றும் நெருப்பும் வானும்
வாழும் மக்களும் வையகம் !
பயிரும் உயிரும் வாழ - பாயும்
நீரில் பகையும் உண்டோ ?

----------------------------------------------------------------------
முல்லை பெரியாறு அணையால் எழுந்த எண்ணம் .
----------------------------------------------------------------------

செல்வி ஷங்கர்