Tuesday, February 16, 2010

பாலே நடனமாடு ....!

ஏழு மாதமே ஆன எங்கள் பேத்தியின் அருகில் இருந்த போது தோன்றிய சிந்தனைகள்
-------------------------------------------------------------------------------

சின்னக் குழந்தையைப் பார்க்கையில் அதிலோர் மகிழ்வு !

அதன் புன்னகை தவழும் கன்னக்குழியை நோக்குகையில் அகிலமே நம் காலடியில் !

கையணைத்து, காலுதைத்து, கண்கள் நோக்கி, சிரிக்கையில் நம் இதயமே மென்மலர் ஆகிறது !

கற்றைக்குழல் கைகளில் பிடித்து கன்னம் ததும்பப் பார்க்கையில் படைப்புகளே நமக்காகத்தான் என்று எண்ணத் தோன்றுகிறது !

கை தட்டு ! கை தட்டு ! என்ற உடன் அந்த சின்னஞ்சிறு விரல்கள் நீள, காற்றெனத் தட்டும் ஒலி ! அப்ப்ப்ப்பா !

தென்றலுக்கு எப்படி இந்த மென்மை வந்தது !

தவழவே தெரியாத தளிர்க் கால்கள் உதைக்க 'பாலே' ஆடு என்றதும் கைகளைத் தலைக்கு மேல் தூக்கி, வளைத்து, சிரிக்கும் சிரிப்பில் இந்த உலகமே இந்திர லோகம் தான் !

அதெப்படி குழந்தையின் உருவில் இறைவன் இயற்கையைப் படைத்தான் !

இன்னும் வளருது உலகம் வானம் நோக்கி !

வாழ்த்த வேண்டாமா பிஞ்சுக் கைகளை !

வாழ்க ! வாழ்க ! வாழ்க வளமுடன் !

செல்வி ஷங்கர்

Sunday, February 7, 2010

வாசகர்களின் எதிர்பார்ப்பு

வலைப்பூக்களில் இடுகைகளைப் படிக்கும் வாசகர்கள் என்ன எதிர்பார்க்கிறார்கள் ?


விரல்கள் பட்டனைத் தட்டினால், கண்கள் பதிவுகளில் பார்வையைச் செலுத்தினால் சிறிது நேரம் நம் நினைவுகள் அவ்வரிகளில் நிலைக்க வேண்டும். படித்தால் சற்று மனதிற்கு மகிழ்வாக இருக்க வேண்டும். மிகவும் நம் சிந்தனையைக் குழப்பக்கூடாது. மொக்கைகள் கூட சிரித்த உடன் சில கருத்துகளை நம்மை அறியாமல் பின்னூட்டம் இடச் செய்ய வேண்டும்.


பதிவர்களின் எண்ண ஓட்டங்கள் நம் வாசகர்களின் எதிர்பார்ப்புகளில் நீந்த வேண்டும். வேடிக்கை என்றாலும், விளையாட்டு என்றாலும், வினோதம் என்றாலும், படப்பதிவுகள் என்றாலும், கற்பனைக் கதைகள் என்றாலும், காவிய ஓட்டங்கள் என்றாலும் வாசகர்கள் மனதிற்கு ஒரு மாற்றாக இருக்க வேண்டும் என்று வாசகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.


ஓடி வந்து இடுகைகளில் பார்வையைச் செலுத்தினால் தன் வெளியுலகச் செயல்களில் இருந்து தனக்கொரு விடுதலை கிடைக்காதா என்று எண்ணுகிற வாசகர்கள் ஏதோ ஒன்றை எதிர்பார்க்கிறார்கள். படைப்புகள் சில வாதாட வைக்கும்; சில மறுப்புணர்ச்சி காட்டும்; சில சிந்தனையின் சிதறல்களாய் வியப்பூட்டும்; சிலவற்றில் சீற்றமும் எதிர்ப்பும் எழுத்துகளாய்ப் பூக்கும். அவற்றை வாசகர்கள் ஏற்கிறார்கள்; மறுக்கிறார்கள்; உடன்படுகிறார்கள்; உறவாடுகிறார்கள்.


எங்கோ ஏதோ ஒன்றில் இயங்கிக் கொண்டிருக்கும் இவர்கள் இரவு நேரத் தூக்கத்தைக் கூடத் துறந்து இடுகைகளில் கண்ணோட்டம் இடுகிறார்கள் என்றால் அதில் அவர்களின் எதிர்பார்ப்பும் உண்டு அல்லவா. கருத்துகள் பயனுள்ளதாய் இருந்தால் செலவிடப்படும் நேரங்கள் சிறந்ததாகின்றன. பொழுதுபோக்குதான் ஆனாலும் புறஞ்சொல்லல் கூடாதே ! அழச் சொல்லி இடித்துரைக்கும் நட்பும் இங்குண்டு ! தட்டிக்கொடுத்து சிந்தித்து மகிழ்கின்ற நட்பும் இங்குண்டு ! பட்டும் படாமலும் தொட்டும் தொடாமலும் பேசி மகிழ்கின்ற நட்பும் இங்குண்டு ! முகம் தெரியாமல் முகிழ்கின்ற கருத்துகளை முழுவதுமாய் வடிக்கின்ற நட்பும் உண்டு !


எவற்றை எல்லாம் எப்படி எல்லாமோ அறிந்திருந்தாலும் தமிழில் தட்டுகின்ற எழுத்துக்கு ஓர் உணர்வு உண்டு. எதை எப்படி சொன்னாலும் தமிழில் அதற்கோர் அறம் உண்டு. அன்பு பயவாத, அறிவு புகட்டாத, அறத்தை உணர்த்தாத, ஆற்றல் விளையாத, எதையும் தமிழன் எழுத்து வடிவில் ஏற்க மாட்டான். இது மொழி உணர்வு ! இம்மொழியைப் பேசுகின்ற ஒவ்வொருவரும், எழுதுகின்ற ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு நற்பயனை எதிர்பார்க்கிறார்கள். அது சிந்தைக்கும் செயலுக்கும் சற்று நலம் பயப்பதாய் இருக்க வேண்டும் என்று எதிர் பார்க்கிறார்கள். எதிர் பார்ப்பு இல்லாத எந்தச் செயலும் ஏமாற்றம் தானே !


ஓய்வு நேரத்தைப் பயனுள்ளதாய் ஆக்குகின்ற வலைநட்பு, இடுகைகளில் படிப்பவர் உள்ளங்களைக் காண வைக்கின்றது. வாசகர்கள் படைப்புகளில் பார்வை செலுத்தும் போது அவை சுவையுடையதாய்ச் சொல்லப்பட வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள்.

மிக நீளமாக, பொறுமையைச் சோதிக்கக் கூடிய பக்கங்களில் கருத்துப் புதையல்கள் இருக்கின்றன. ஆனால் அவை சுருக்கமாக இருந்தால் மட்டுமே வாசகர் அனைவருமே அவற்றைப் படிக்கின்றனர். எழுதி அஞ்சல் செய்யப்படாத அஞ்சல்களாய் இருப்பதை விட அவை எழுதப்படாமலேயே இருந்திருக்கலாம். வாசகர்கள் குறும் படைப்புகளை விரும்பிப் படிக்கின்றனர். நீண்ட படைப்புகள் சுவையூட்டக் கூடியதாயும் படிக்கத் தூண்டுவதாயும் இருக்க வேண்டும் என எதிர்பார்க்கின்றனர்.

பதிவர்கள் பலவிதம் என்று ஒரு இடுகை ஏற்கனவே இட்டிருக்கிறேன்.

இரண்டையும் படித்து, கருத்துக் கூறுங்களேன் !

நல்வாழ்த்துகள் அனைவருக்கும்
செல்வி ஷங்கர்