Saturday, November 29, 2008

குமுறும் நெஞ்சம் - சிதறும் கண்ணீர்

இப்பதிவு இவ்வலைப்பூவினில் ஐம்பதாவது பதிவாக வெளி வருகிறது.
-------------------------------------------------------------------------------------------
அமைதிப் பூங்கா அதிர்கிறது !
அறிவியல் வளர்ச்சி சிதர்கிறது !
வளரும் நாட்டின் வளர்ச்சி
தீவரவாத சிந்தையின் சிதையில் !
கதறும் ஓலம் - தகரும் கட்டிடம் !
பற்றும் நெருப்பில் பரிதவிப்பு !
சுட்டு வீழும் உடல்கள் !
உலுக்கும் சீர்குலைவு !
கொதிக்கும் உள்ளம் !
குமுறும் நெஞ்சம் !
சிந்தும் கண்ணீர் !
ஏனிந்த அழிவு ?
எதற்கு இந்தக் குலைவு ?
குண்டு வெடிப்புகள் தருமா குவலயந்தன்னை ?
மடிபவன் மனிதன் !
மடியச் செய்பவன் மனிதன் !
உயிரைக் கொன்று
உடைமைகள் அழித்தால்
உயர்வு வருமா ?
உள்ளம் நிலைக்குமா ?
மனித நேயம் மடியலாமா மண்ணில் ?
ஒருவன் வளர்ச்சி மற்றவன் அழிவிலா ?
சிந்தித்தால் சிந்தை குலையுமே !
யார் புகட்டுவது அன்பு மனப்பான்மையை ?
வன்னெஞ்சங்களே - வாழ விடுங்கள் வையத்தை !!!
--------------------------------------------------------------

Sunday, November 23, 2008

எண்ணங்கள் - வடிவங்கள்

இறை :
----------
இறைவா வா
குறைவே போ
நிறைவே எங்கும் !
---------------------------------

இடம் :
-----------
வீடு நிறைய
பொருள்கள் !
மனத்தில்
ஏனோ
வெற்றிடம் !
----------------------------------

பொருள் :
---------------
ஓடியபோது
ஒன்றுமில்லை !
நாடியபோது
காணவில்லை !
தேடிய பின்னோ
தேவையில்லை !
---------------------------

ஆசை :
-----------
ஆடிப்பாட
ஆசை !
ஓடிஓடி
நின்றபின் !
----------------------------------

மழலை :
-------------
அடுக்கி வைத்த
பொம்மைகள்
அழகாக !
அழாத
குழந்தைகளாய் !
-----------------------------------

இயற்கை :
-------------
ஆற்று நீரே
அடுக்கு மாடி
கழிவு நீரோடை !
ஆற்றல் மிகு
மனிதா !
மாற்றவேண்டும்
நிலைமை !
-----------------------------------
செல்வி ஷங்கர்
-----------------------------------

Thursday, November 20, 2008

ஒரு கருத்து !

உதிக்கின்ற சூரியனும்
கிழக்கில் !

உண்கின்ற உணவும்
உழைப்பில் !

வருகின்ற அனைத்தும்
வாழ்வில் !

செல்வி ஷங்கர்
------------------------

Sunday, November 16, 2008

மனக் குரல் - எண்ணக் குறள் - 2

செய்தல் நலத்தினை இல்லெனில் யாதொன்றும்
செய்யா திருத்தல் நலம்.

உற்ற துரைத்தல் உவப்பெனில் மற்றது
கற்றலும் கல்லாமை தான்

பெற்றது போற்றி பெரும்பொருள் ஈயின்
இழந்தது தானே வரும்

கற்றது நீங்கின் கவினுலகில் மற்றதென் ?
உற்றது போற்றி வளர்.

போராடிப் பெற்றதெலாம் பூமியில் என்றுமே
மாறாது நிற்பது காண்.

நீரைப் பிடிக்க நிலவைப் பிடிக்கும்
மனிதா ! நிலத்தை மதி.

வியர்க்கும் நிலையில் நிழலை நினையும்
மனமே ! மரத்தை நடு.

வெந்து தணிந்த நிலமெலாம் நீர்சொரிய
வந்து குளிருமா வான்.

-------------------------------
செல்வி ஷங்கர்
-------------------------------

Sunday, November 9, 2008

வாழ்ந்து பார்க்க ........

அவளுக்கு வீடுதான் உலகம் !
வீதிகள் எல்லாம் பாலங்கள் !
அவள் வெளிஉலகை எட்டிப்பார்க்க !

அவளுக்குப் பிள்ளைகள்தான் எதிர்காலம் !
பேசும் சித்திரங்கள் பெருமைப்பட !

அவளுக்குக் கடமைதான் காவல் !
மூச்சுவிட மறக்காத முயற்சி !

அவளுக்கு அன்புதான் செல்வம் !
அனைவருக்கும் அள்ளிக்கொடுக்க !

அவளுக்கு அவன்தான் அனைத்தும் !
அரவணைக்கும் ஆக்கச் செயலில் !

அவளுக்கு அவளேதான் வரலாறு !
வாழ்ந்து பார்க்க ! வளர்த்துப் பார்க்க !!

Sunday, November 2, 2008

எத்தனை பெரிது உலகம் ?


என்ன செய்கிறாள் என்னவள் ?

இந்தக் கோட்டையைப் பிடித்து விடுவாளா ?

இல்லை சிகரம் தொட்டு விடுவாளா சின்னவள் ?

எத்தனை பெரிது உலகம் ?

என் கைக் குட்டிக் கரடியை விடவா !

இந்தப் பலகையில் அடக்கவா

அத்தனைக் காட்சியையும் .......... !

நான் எழுதிய எழுத்துகள்

என் பெயரின் பதிவுகள் !

இவைதானா இந்த மொழி !

இதில் தானா இத்தனை படைப்புகள் !

என் கண்களுக்குள் கருத்தாய்ச் சென்று

என் மனத்திரையில் மதியாய்ப் பரவி

நான் வடிக்கும் மழலைக்குள் மகிழ்வாய்

வரை கோடாய் வந்ததே இப்பலகையில் !
செல்வி ஷங்கர் : எங்களுடைய செல்லப் பேத்தி முதன்முதலாய் அவள் பெயரை எழுதிய பலகை