Monday, August 11, 2008

யாருக்கில்லை சோகம் ? பூவிற்கில்லை வாசம் !

தொட்டில் பிள்ளை
கட்டில் வந்தால்
துன்பம் !

எட்டிப் பார்க்கும்
வயதில் ஏக்கம்
வந்தால் துன்பம் !

தட்டிக் கதவை
தாண்டிப் பார்க்கும்
தழைத்த வயதில்
சோகம் !

முட்டி மோதி
முகத்தின் பொலிவில்
வளர்ந்த இளமை
வாசம் மலர
சோகம் !

சுற்றும் சூழல்
கற்ற கல்வி
கையில் உள்ள
காகிதப் பட்டம் !

ஏறி இறங்கும்
இளமை முறுக்கு !
ஏக்கம் ! தூக்கம் !
எட்டிப் பார்க்க
எடுத்து வைத்த
காலடிகள்!

கணக்குப் பார்க்கும்
காசுகள் ! கையை
விரிக்க ! கால்கள்
ஓடும் ஓட்டம் !

நினைத்துப் பார்த்த
கனவுகள் எல்லாம்
காலச் சக்கரம் !
நிலையாய் நிற்க.

மூச்சு வாங்கினால்
முக்கால் வயது
ஓடி விட்டது !
முதுமை மட்டுமே
கட்டி அணைக்க
காத்து நின்றது !

காகிதப் பட்டம்
கழனி வயலாய் !
கைகள் ஊன்றி
பயிரை வளர்த்தது !

பறவைகள் ! விலங்குகள் !
பார்த்து விரட்ட
பக்கம் ஆட்கள் !
பொத்திப் பொத்திப்
பொறுமை போனது !
ஆசை ! அன்பு !
உணர்வு ! உள்ளம் !
எல்லாம்
மூடிய கதவுகள் !

வளர்ந்த வயதும்
வாழப் பார்த்த
வடிவும் ! வடிகால்
தேட அலைந்த
பார்வையும் !

பாசம் வளர்த்தே
பகிர்ந்து கொள்ள
நட்பாய் ! உறவாய் !
யாரும் இல்லா
இயந்திர ஓட்டம் !

இரும்பைக் கூட
தட்டிப் பார்த்து
அடித்து நிமிர்த்தி
அடங்கும் வகையில்
சேர்க்கும் உலகம்
மனத்தை மட்டும்
மக்கள் இடையே
பாரா முகமாய்
ஓரம் கட்டி
ஒழிப்ப தேனோ ?

சுற்றி நிற்கும்
தொட்டால் சுருங்கி
உலகம் !
கட்டி வளைத்து
ஒரு கடிவாளம்
இட்டது !

உலகின் ஆசை
ஊரின் ஆசை
உறவின் ஆசை
எல்லாம் !
ஓசைப் படாமல்
ஒதுங்கிக் கொண்டது !

உலகம் என்பது
கூட்டிக் கழித்து
நீட்டி நிமிர்ந்து
ஒருகோடு கிழித்தது !
கிழித்த கோடு
கூடாய் அமைய
கொடி மரம்
அசைந்து
நிழலும்
காற்றும்
அங்கே சூழ்ந்தது !

குஞ்சுகள் இரண்டு
கொஞ்சி மகிழ
இயந்திர உலகம்
இளகி விரைந்தது !
கட்டம் கட்டி
கட்டுக்குள் வளைய
காவியம் படித்தது!
காலப் பறவை
பறந்தது ! இது தான்
இங்கேஉலகம் எவர்க்கும் !

செல்விஷங்கர் - 11.08.2008
----------------------------------