Saturday, October 25, 2008

வளர்ச்சி என்பது வயதா ?

ஐந்து வயதில் ஆர்வம் இருந்தது
பத்து வயதில் பயம் வந்தது
பருவ வயதில் பதட்டம் எட்டிப்பார்த்தது
படிக்கின்ற வயதில் எதிர்காலமே
எண்ணத்தில் மிதந்து சென்றது !
போராடும் போட்டி உலகில்
நீந்தவே பொழுதுகள் சாய்ந்தன
வளர்ச்சி என்பது வயதா ?
இல்லை !
தோற்றத்தின் மாற்றமா ?
சூழ்நிலை புரிந்தது ! சுற்றமும்
நட்பும் விரிந்தது ! நினைவுகள்
நிழலாகின ! கட்டிப்போட்டால்
சுற்றுகின்ற காளைபோல்
கால்கள் கட்டுத்தறியில் !
வட்டத்துக்குள் சுற்றுகின்ற
வண்டியாயிற்று வாழ்க்கை !
ஆனாலும் அதிலோர் சுவை !
சுமைகள் எளிதானால் சுகந்தானே !
சுமையின்றிச் சுற்றும் உலகில்லை !
சுமக்க மறுப்பவர் எவரேனும் உளரோ ?

செல்வி ஷங்கர்

Tuesday, October 21, 2008

வள்ளுவம் வாழ்வின் வழிகாட்டி !

மாநில அளவில் ஸ்ரீராம் சிட்பண்ட்ஸ் நடத்திய பாரதி - வள்ளுவர் விழாவின் தொடர்பாக நடந்த பேச்சுப் போட்டியில் மாநிலத்திலேயே முதல் மாணவியாக தேர்ந்தெடுக்கப்பட்டு, முன்னாள் குடியரசுத் தலைவர் திரு ஆர்.வெங்கட்ராமன் அவர்களிடம், பள்ளிக்கான சுழற் கேடயமும், போட்டியாளர்க்கான பண முடிப்பும், பெற்ற என் செல்ல மகளின் பேச்சு. ( 1993)
-----------------------------------------------------------------------------------------------
நடுவர் உள்ளிட்ட அவையினரை வணங்கி மகிழ்கிறேன்.இந்த உலகத்தில் எந்த ஒரு மனிதனும் எதையும் எளிதில் வேதம் என்று ஒத்துக் கொள்ள மாட்டான். ஆனால் உலகம் முழுவதும் ஒன்றை பொது மறையாக ஏற்றுக் கொண்டுள்ளதென்றால் உண்மையில் அந்த மனிதனின் சிந்தனை பாராட்டுக்குரியதே ! பாயில் படுத்து நோயில் விழும் மனித வாழ்க்கையில் இன்பங்கள் சேர்க்கவும் துன்பங்கள் நீக்கவும் துணை புரிவது வள்ளுவமே ஆகும். உண்மையில் அந்நூல் வாழ்வின் வழி காட்டியே !மனிதனாகப் பிறந்தவன், அன்போடு வாழ வேண்டும் ! அறிவோடு திகழ வேண்டும் ! பகுத்தறிவோடு பழக வேண்டும் ! பண்பில் உயர வேண்டும் ! புனிதனாய் மாற வேண்டும் ! வாழ்வில் உயர்வதற்கு இவை மட்டும் போதாது - அவன் உண்மையைப் பேச வேண்டும் ; பொய்மையை நீக்க வேண்டும் ; நட்பில் உயர வேண்டும் ; நல்லதைக் கொள்ள வேண்டும் ; அல்லதைத் தவிர்க்க வேண்டும் ; வையத்து வாழ்வாங்கு வாழ வேண்டும் !இன்றைய சமுதாயத்தில் மனிதன் அன்பின்றி, அறிவின்றி, நட்பின்றி, நேர்மையின்றி, நன்னெறியின்றி, வாழும் முறை தவறி, வழி காட்டும் துணையின்றித் தட்டுத் தடுமாறுகின்றான். அதற்கு வள்ளுவம் காட்டும் வழி தான் என்ன ?அன்பாயிரு - அதற்காக நீ வருந்த வேண்டியதில்லை !
இன்சொல் பேசு - இதற்காக உன் நா துன்பப்படுவதில்லை !
பொறுமையாயிரு - அது உன்னைப் பொன் போல் உயர்த்தும் !
எதிரியை எளிதில் நம்பி விடாதே !
பகைவனின் கண்ணீரைப் பார்த்து பக்கம் சாய்ந்து விடாதே !
வணங்கும் கைகளுக்குள் வாளும் மறைந்திருக்கும் !
சொல் வேறு செயல் வேறு பட்டார் தொடர்பு கொள்ளாதே !
அது கனவிலும் இன்னாது !
வலிமை அறியாது வாள் வீசாதே -அது உன்னையே வீழ்த்தி விடும் !
கூற்றத்தைக் கைதட்டி அழைத்து ஆக்கத்தை இழக்காதே !
அன்பில் உயர்ந்து நில் !
என்பும் பிறர்க்கென்று சொல் !
வெற்றுடலாய் நடமாடி வேடிக்கைப் பொருளாகி விடாதே !
என்றெல்லாம் வள்ளுவம் காட்டும் வழி நாம் வாழ்வில் உயர
நல் வழியே !அடுத்து அறிவு ! அது அற்றங்காக்கும் கருவி ! பகைவராலும் உள்ளழிக்கலாக அரண் என்று வள்ளுவர் அதற்குத் தரும் விளக்கம் அழகானது ! எப்பொருள் எத்தன்மைத் தாயினும், அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு ! எதிரதாக் காக்கும் அறிவினார்க்கில்லை அதிர வருவதோர் நோய் - என்பதெல்லாம் அறிவிற்கு வள்ளுவர் தரும் முடிவு !சிந்தித்துச் செயல்படு ! வருமுன்னர் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர் வைத்தூறு போலக் கெடும் ! அதனால் வெள்ளம் வருமுன் அணை போடு ! என்று அவர் நம் வாழ்க்கைக்குத் தரும் எச்சரிக்கை - நல்வாழ்வுப் பாதைக்கோர் பச்சை விளக்கு ! இன்னும் அவர் கூறும் வாழ்க்கை விளக்கங்கள் நம்மை எல்லாம் மெய் சில்ர்க்க வைக்கின்றன !கற்றதைச் சொல்லாதவன் காகிதப்பூ ! அறிவில்லாதவனின் அழகு மண்ணால் செய்த மாண்புறு பாவை ! கற்றறிவின்றி ஆன்றோர் அவைபுகல் எல்லைக் கோடின்றி விளையாடும் விளையாட்டு ! கற்றிருந்தால் நீ மனிதன் ! இல்லையெனில் விலங்கு ! நெஞ்சுரம் இருந்தால் நீ மனிதன் ! இல்லையெனில் மரம். இப்படி அவர் அறியாமையைச் சாடி அறிவைப் புகட்டி வாழ்வுக்குத் தரும் விளக்கம் - அது மனித வாழ்க்கைக்கோர் கலங்கரை விளக்கம் !அடுத்து அன்பு - அது வாழ்க்கைக்கு அடிப்படைத் தேவை. அந்த அன்பில்லாதாவன் என்புதோல் போர்த்திய விலங்கு ! அவனால் பயன் ஒன்றுமில்லை ! மனிதனின் அன்பு விருந்தினை மென்மையாக நோக்க வேண்டும் ! அது உலகத்தோடு ஒட்டி உறவாட உதவ வேண்டும் ! உள்ளத்தே பொங்கி எழும் சினத்தை அடக்க வேண்டும் ! இன்னா செய்தார்க்கும் இனியவே செய்தல் வேண்டும் ! இன்பத்துள் இன்பம் விழையாது துன்பத்துள் துன்பம் துடைக்க வேண்டும் ! அன்பால் ஆண்டவனைப் பணிய வேண்டும் ! அவன் ஆதி பகவன் ! அறவாழி அந்தணன் என்று அவர் ஆன்மீகத்திற்குத் தரும் விளக்கம் ஒன்றே போதும் அவர் சாதிச் சளுக்கறுக்கும் சான்றோர் என்பதற்கு ! சமயப் பிணக்கறுக்கும் ஆன்றோர் என்பதற்கு ! இதை விடச் சிறந்த வாழ்க்கை வழிகாட்டி வேறென்ன இருக்க முடியும் !மனித வாழ்க்கையில் கொடுத்து வாழும் பண்பு உயர்வானது ! எனவே உன்னால் முடிந்தால் கொடு ! இல்லை எனில் அடுத்தவன் கொடுப்பதைத் தடுக்காதே ! அது பாவம் ! அந்தப் பாவம் தீர்க்க வழியே இல்லை !சினம் கொள்ளாதே !
அது சேர்ந்தாரைக் கொல்லும் !
அறம் செய்ய நீ ஆன்றோனாக வேண்டாம் !
மனத்துக்கண் மாசிலனாகு - அது போதும் !
கொல்லா நலத்தது நோன்பு !
பிறர் தீமை சொல்லா நலத்தது சால்பு !
எதையும் ஏற்றுக் கொள் !
தோல்விகள் இயற்கை !
எவரிடமும் கை ஏந்தாதே - அது இழிவு !
முடியாதென்று முடங்கிக் கிடக்காதே !
தக்க காலமும் இடமும் அறிந்து செயல்படு - இந்த உலகத்தையே உன்னால் பெற முடியும் !இதனை இதனான் இவன் முடிக்கும் என்றாய்ந்து அதனை அவன் கண் விடு !
தேரான் தெளிவும் தெளிந்தான் கண் ஐயுறவும் தீரா இடும்பை தரும் !
எனைவகையான் தேரியக் கண்ணும் வினைவகையான் வேறாகும் மாந்தர் பலர் !சிந்தித்துச் செயலாற்று !
ஒழுக்கம் தவறாதே !
சொன்ன சொல் பிறழாதே !
அன்பாயிரு !
அறிவாயிரு !
பண்பாயிரு !
வெற்றி கொள் !
வேடந்தவிர் !
செய்தொழில் போற்று !
சோம்பலை அகற்று !
கொடுத்து வாழ் !
கெடுத்து வாழாதே !
உண்மை பேசு !
உயர்ந்து வாழ் !
அச்சமே கீழ்களது ஆசாரம் !
தன்மானம் இழக்காதே !
தன்னிலையில் தாழாதே !
தாழ்வு வந்துழி உயிர் வாழாதே !
வறுமையை நினைத்து துவளாதே !
வாய்ப்புகள் இருக்கு தயங்காதே !


இப்படி எல்லாம் வள்ளுவன் காட்டும் வழி என்னை எங்கேயோ இழுத்துச் செல்கின்றது !நீ ஒராண்டு திட்டமிட்டால் தானியங்களை விதை !
நீ பத்தாண்டுகள் திட்டமிட்டால் மரங்களை நடு !
நீ நூறாண்டுகள் திட்டமிட்டால் மனிதர்களை உருவாக்கு !


என்றான் ஓர் அறிஞன். ஆனால் வள்ளுவனோ ஆயிரம் ஆண்டுகள் திட்டமிட்டு ஆன்றோர்களை அல்லவா உருவாக்கி உள்ளான். அதனால் தான் அவன் தெய்வப்புலவன் திருவள்ளுவன். அவன் வள்ளுவமும் குன்றின் மேலிட்ட விளக்கு ! இந்தக் குன்றின் மேலிட்ட விளக்குக்கு நம் குவலயமே சாட்சி ! இந்த ஒரு மாட்சிமை போதாதா தெய்வப் புலவரின் திருவள்ளுவத்திற்கு !வாருங்கள் தீபத்தை ஏற்றுவோம் !


திருக்குறள் போற்றுவோம் !


உள்ளிருள் நீக்குவோம் !வருகிறேன் !
வாய்ப்பிற்கு நன்றி !
வணக்கம் !
--------------------------------------------------------
ஆக்கம் : செல்வி ஷங்கர்

--------------------------------------------------------

ஒலி வடிவம் :---------------------------------------------------------

செல்வி ஷங்கர்

Monday, October 20, 2008

சுமைகள் வேண்டாம் !

அருமைத் தோழி கயல்விழி முத்துலெட்சுமி என்னை ஒரு கதை - குறளின் அடிப்படையில் - எழுத அழைத்தார். அதன்படி இச்சிறு கதை ......

வேகமாகச் சென்று கொண்டிருந்த ராமு சற்றே மர நிழலில் ஒதுங்கினான். ஏதோ சிந்தனையில் வானத்தை நிமிர்ந்து பார்த்தான். வெயிலுமில்லை - மழையுமில்லை. ஆனால் காற்று வர மறுக்கின்ற ஒரு புழுக்கமான சூழ்நிலை. மனத்தின் இறுக்கமும் பெருமூச்சாய் வெளி வர, அந்தப் பேருந்து நிறுத்தத்தில், சிமிண்டாலான இருக்கையில் அமர்ந்தான்.

சுற்றுமுற்றும் கண்களை சுழல விட்டான். எல்லாரும் ஏதோ ஒரு வேகத்தில் பேருந்தில் ஏறுவதும் இறங்குவதுமாய் அந்தச் சாலை இயங்கிக் கொண்டிருந்தது. அதே நேரத்தில் இராமுவின் மனமும் அசை போட்டுக்கொண்டே, அடுத்து தான் செல்ல வேண்டிய பேருந்தின் வருகைக்காகக் காத்துக் கொண்டிருந்தது.

ஆம் ! எப்படியாவது சொன்னதைச் செய்து விட வேண்டும் - ஒரு நாள் போல் நாளை பார்க்கலாம் ! அப்புறம் பார்க்கலாம் ! அவசரப் பட வேண்டாம் ! என்று எண்ணிக் கொண்டே வீட்டு வேலைகளை தள்ளிப் போட்டுக் கொண்டே போவது போதும். யார் தான் வீட்டில் இதை பொறுத்துக் கொள்வார்கள் ? ஒரு நாளா ? இரண்டு நாளா ? தினமூம் இப்படித்தான். பொறுமைக்கும் ஒரு அளவு வேண்டாமா ?

பிள்ளைகளூம் பேசாமலே எல்லா வேலைகளையும் செய்து கொண்டிருந்தனர். ஏனோ ராமுவிற்கு வெளி வேலைகளில் இருந்த ஈடுபாடு வீட்டு வேலைகளில் அவ்வளவாக இல்லை. வீடும் நம்முடையது தானே ! அந்தந்த வேலைகளை அவ்வப்போதே செய்வோமே என்ற எண்ணம் மட்டும் எப்படியோ அவனுக்கு மறந்து போய் விடுகிறது. இதனால் அவ்வப்போது ஏறபடும் மனச்சுமையை அவன் சுமந்து தான் ஆக வேண்டி இருந்தது. வேலைகள் சுமையாகாமல் பார்த்துக் கொண்டால் நமக்குத் தானே நல்லது அப்பா ! என்று பிள்ளைகள் சொல்லியது இன்றைக்கென்னவோ ராமுவிற்கு பளிச்சென உறைத்தது ! அதனால் தான் வீட்டு வேலைகளைப் பார்க்க விரைந்து கொண்டிருக்கிறான் புத்துணர்வுடன்.

அதிகாரம் : தெரிந்து செயல் வகை

செய்தக்க அல்ல செயக்கெடும் செய்தக்க
செய்யாமை யானும் கெடும்.

விளக்கம் : செய்யக்கூடாத செயல்களைச் செய்வதால் கேடு வரும். செய்ய வேண்டிய செயல்களைச் செய்யாமல் இருப்பதாலும் கேடு வரும். எனவே எதனை எப்போது எப்படிச் செய்ய வேண்டும் என்று அறிந்து அதனை அப்போது அப்படியே செய்ய வேண்டும். செய்ல்களே வழிபாடல்லவா !

இப்பொழுது மூன்று பதிவர்களை நான் அழைக்க வேண்டுமாம். யாரை அழைப்பது - யாரை விடுவது ? வேண்டாம் இந்த விபரீத விளையாட்டு - விட்டு விடுகிறேன் பதிவர்களின் விருப்பத்திற்கு. யாரேனும் மூன்று பதிவர்கள் தொடரலாம். மறுமொழியில் விருப்பத்தைத் தெரிவித்தால் மகிழ்ச்சி அடைவேன்.

வருக ! வருக !! - கதைகள் தருக! தருக !!

விதிமுறைகள் : திருக்குறளின் கருத்தும் கதையின் கருத்தும் ஒன்றாக இருக்கவேண்டும். இன்னும் மூன்று பேரையாவது அழைத்து எழுத வைக்க வேண்டும்.

நல்வாழ்த்துகள்

செல்வி ஷங்கர்

Thursday, October 9, 2008

மாற்றொலி

சுற்றும் உலகம் நின்றால்
சுழலும் மானிடம் என்னாகும் ?
கற்கும் மாந்தர் காண்பது
தெற்கும் வடக்கும் திகழும்
திசையா ? நீந்தும் தீவா ?
சுற்றிச் சுற்றி வந்தாலும்
தட்டித் தட்டிப் பார்த்தாலும்
எட்டி எட்டிச் சென்றாலும்
எங்கும் திகழும் அமைதியே !
சுற்றும் கால்கள் ! சுழலும்
கண்கள் ! காண்பதெல்லாம்
அமைதி ! மின்னல்போலே
மின்னொளி மிளிரும் காலதர் !
மரங்கள் சூழ்ந்த மாடங்கள் !
நிழல்கள் அசையும் மாந்தர் !
காற்றில் மிதக்கும் பேச்சொலி !
கண்கள் நோக்கும் அமைதி !
கால்கள் தேடும் ஓய்வு !
மனமது நினைத்தால் ---------- !!

செல்வி ஷங்கர்

மனக் குரல் - எண்ணக் குறள்

மனத்தில் தோன்றிய எண்ணங்களைக் குறளாய் வடித்திருக்கிறேன்.

கண்டும் உணர்ந்தும் கவிகள் பயில்வதே
என்றும் இளைஞர் நிலை.

அருகிருந்(து) ஆன்றசொல் பேசி விருந்தெதிர்
கொள்ளவே நாளும் நினை.

பாடம் படித்தே பலகலை போற்றிட
வேடம் தவிர்த்தே இரு.

சின்னக் குழந்தை சிரித்தே மகிழ்ந்திட
வண்ணக் கதைகள் உரை.

வளர்ந்த மரங்கள் மலர்ந்த செடிகள்
நிறைந்த வனமே நிலம்.

உண்மை உரைத்தே உவகை நிறைந்திட
நன்மைச் செயலே புரி.

செல்வி ஷங்கர்