Showing posts with label இயற்கை. Show all posts
Showing posts with label இயற்கை. Show all posts

Tuesday, December 27, 2011

நீரில் பகையும் உண்டோ !

நீரில் பகையும் உண்டோ !
-------------------------------------

விருந்தினன் நட்டான் ஒரு மரம் !
அருந்தி மகிழும் அமுதாய் !
மருந்தின் மிக்க கனிகள்
நாளும் தந்தது நல்லுயிர் வாழ !
நாடும் மக்களும் மகிழ்ந்தனர் !

காலம் சென்றது காற்றாய் !
மரமும் வளர்ந்தது மண்ணில் !
காய்த்துக் குலுங்கிய கிளைகள் !
கனிந்து மணந்த கனிகள் !
சுவைத்து மகிழ்ந்த மக்கள் !

சூறாவளியாய் வந்தது ஒர்புயல் !
சுற்றுச் சூழல் பொங்கி எழுந்தது !
இல்லாததை இருப்பதாய் ஓர் கதை !
கதைக்குக் கண்ணும் காதும் முளைத்தது !
உதைக்கும் கால்கள் ஓடி வந்தன !

நியாயத்தை நீதியை நேர்மையை
எங்கே விற்றனர் மாந்தர் ?
பொய்யை விதைக்க பூகம்பம்
வந்தது ! பூர்வீகம் சொல்லும்
கதைகள் கருத்தை மறைத்தன !

நீரும் நிலமும் இயற்கை !
காற்றும் நெருப்பும் வானும்
வாழும் மக்களும் வையகம் !
பயிரும் உயிரும் வாழ - பாயும்
நீரில் பகையும் உண்டோ ?

----------------------------------------------------------------------
முல்லை பெரியாறு அணையால் எழுந்த எண்ணம் .
----------------------------------------------------------------------

செல்வி ஷங்கர்

Saturday, September 4, 2010

எங்கே ? எங்கே ?

குருவி கூவுகிற என் குடிலில்
குலவி மகிழும் மரங்கள் !
கூண்டுகள் போலே மாடங்கள் !
மகிழ்வாய் இருக்கிறது மனத்திற்கு !
மழை வரும் போல மேகங்கள் !
மலைகள் தாங்கும் வானம் !
மாலை நேர மந்தாரம் !
மனம் மகிழும் மரக்கோலம் !
காற்றடித்துக் கலைகின்ற வானம் !
நேற்றைய நிலைமை திரும்புமா ?
நிலம் வெடிக்கும் வெக்கை மாறுமா ?
அடுக்கு மாடி 'ஏசி'க்கள் மேலே குயில்கள் !
அலை பாயும் கேபிளில் வரிசையாய் காகங்கள் !
பச்சை மரங்களின் கீழே கார்களின் வரிசை !
காய்ந்து கிடக்கும் ஆற்று வெளியில் குப்பைகள் !
தெப்பம் மறந்த குளத்தில் கிரிக்கெட் !
இன்னும் கொஞ்ச நாளில் இங்கே
இயற்கை எங்கே ? எங்கே ?

செல்வி ஷங்கர்

Saturday, December 27, 2008

இயற்கை மாற்றம் .......... !

மாலைக் கதிரவனே !
அப்படி என்ன மகிழ்ச்சி ?
மார்கழி மாலையில்
மகிழ்வாய்த் தோன்றுகிறாய் !

வட்டமிட்டு வரைந்தாற்போல்
கார்மேகக் கூட்டத்தில்
கலைநயமாய்க் காண்கின்றாய் !

செக்கச் சிவந்த
செந்தனலாய் ! சிதறாமல்
அள்ளி வைத்த தீப்பந்தாய் !
விரிந்த வானத்தின்
வீதிகள் நடுவே
திட்டமிட்டு இட்ட
திலகமே நீ !

கட்டிடச் சுவரில்
காக்கைப் பள்ளிக்கூடம் !
கலைந்த மேகங்கள் !
களையாக நடுவில் நீ !
கரும் பச்சை இலைகள் !
காற்றில் சலசலக்கும்
தென்னங்கீற்றுகள் !
கவின் மாலைப் பொழுதின்
காவியமாய் நீ !
மலைகளின் மடியில்
மகிழ் வட்டம் !

பனிக்காற்று பார்வை பட்டு
பரவசமாய்ப் பறவைக் கூட்டம் !
கூட்டுக்குச் செல்லும் குதூகலத்தில்
வரிக்கோடாய் வானில்
சிறகடித்துச் சிலிர்க்கும்
சின்னஞ்சிறு பறவைகள் !

தீர்க்கமாய்ப் பார்க்கின்ற
பார்வையில் பரவசமாய்
பரந்து கிடக்கும் இயற்கை !
பருவ மழையின் பசுமை !

எப்படி நிகழ்ந்தது ?
எப்படி நிகழ்ந்தது !
இந்த இயற்கையின் மாற்றம் !
----------------------------
செல்வி ஷங்கர்
----------------------------

Tuesday, July 22, 2008

உலகம் மலரும் !

நேற்றுப் பெய்த
மழைத் தூறல் !
சற்றே தழைத்த
ஈர மண் !
இயற்கை அளித்த
இன்பப் பரிசு !

அங்கும் இங்கும்
மேயும் ஆடுகள் !
அழகாய்ப் பறக்கும்
குருவிகள் ! ஆற்றின்
கரையில் கீரைப்
பாத்தி ! நீரோ
ஓடை நீர்தான் !
பாறைகள் தெரிய
செடிகள் முளைத்து
கொடிகள் படர்ந்த
பச்சைப் புல்வெளி !

நனைந்த சாரலில்
நிறைந்த நீர்மணல் !
காயும் வெய்யில்
சற்றே ஓய்ந்து
ஈரக் காற்றுடன்
இரவியின் கதிர்கள் !

காலில் செருப்பு
கையில் கொம்பு
தோளில் துண்டு
எண்ணெய் இன்றி
வறண்ட தலையை
கோதிய விரல்கள் !
கண்கள் சுருக்கி
காணும் கால்நடை
கையால் ஒதுக்கி
குனிந்து நடக்கும்
முதிர்ந்த மேய்ப்பான் !

ஏதோ இன்னும்
இயற்கையை நினையும்
ஈரப் புல்வெளி !
மாலை நேரம்
மேகம் மயங்கி
மரங்கள் அசைய
வீசிய காற்றில்
விண்ணில் இருந்து
ஓரிரு துளிகள் !

இதற்கே இத்தனை
ஈரம் என்றால்
சுற்றுச் சூழல்
காற்று ! மழைநீர்
மறித்துத் தேக்கி !
குப்பை கூளம்
கூர்ந்து அகற்றி !
தூரும் வாரி !
தூற்றிய மணலால்
கரைகள் உயர்த்தி !
கன்று மரங்கள்
கணக்காய் நட்டால்
நாடு செழிக்காதா ?

வெப்பக் காற்று
மறைந்து ! பூமி
குளிர்ந்து ! தூய
காற்று வீசாதா ?
பூமி வெப்பம்
தணியத் தணிய
தாரணி செழிக்காதா ?

மலையும் பனியும்
நகர்வது நின்றால்
நானிலம் அதிராதே !
ஆருயிர் அழியாதே !
காப்போம் காப்போம் !
இயற்கை காப்போம் !
உலகம் செழிக்க
உயர்ந்திடும் மரங்கள்
உவப்பாய் நடுவோம்!
உள்ளம் மகிழ்ந்தால்
உலகம் மலரும் !

செல்வி ஷங்கர் - 22082008