Sunday, November 16, 2008

மனக் குரல் - எண்ணக் குறள் - 2

செய்தல் நலத்தினை இல்லெனில் யாதொன்றும்
செய்யா திருத்தல் நலம்.

உற்ற துரைத்தல் உவப்பெனில் மற்றது
கற்றலும் கல்லாமை தான்

பெற்றது போற்றி பெரும்பொருள் ஈயின்
இழந்தது தானே வரும்

கற்றது நீங்கின் கவினுலகில் மற்றதென் ?
உற்றது போற்றி வளர்.

போராடிப் பெற்றதெலாம் பூமியில் என்றுமே
மாறாது நிற்பது காண்.

நீரைப் பிடிக்க நிலவைப் பிடிக்கும்
மனிதா ! நிலத்தை மதி.

வியர்க்கும் நிலையில் நிழலை நினையும்
மனமே ! மரத்தை நடு.

வெந்து தணிந்த நிலமெலாம் நீர்சொரிய
வந்து குளிருமா வான்.

-------------------------------
செல்வி ஷங்கர்
-------------------------------

9 comments:

செல்விஷங்கர் said...

சோதனை ஓட்டம்

ராமலக்ஷ்மி said...

மனதின் குரல் எண்ணக் குறள்களாக
மலரும் போதெல்லாம் கிடைக்கிறது
எமக்குக் கருத்துச் சுடர்.

அத்தனைக்கும் நன்றி.

//வியற்கும் நிலையில் நிழலைத் தேடும்
மனமே ! மரத்தை நடு.//

எவ்வளவு அருமையாகச் சொல்லியிருக்கிறீர்கள்.

செல்விஷங்கர் said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ராமலக்ஷ்மி -

Noddykanna said...

"பெற்றது போற்றி பெரும்பொருள் ஈயின்
மற்றது தானே வரும்" - அருமை, அருமை! அனைத்தும் அருமை! படித்தேன், ரசித்தேன்! வாழ்டத்துகள்!
-- நாடிக்கண்ணா

செல்விஷங்கர் said...

கண்குட்டி பஸ்ஸூ

கருத்துகள் நம்மை மகிழ்விக்கும்
கவிதைகள் கற்றால் கனவுகள் நிலைக்கும்
நல்ல மறு மொழி நல்வாழ்த்துகள்

சிக்கிமுக்கி said...

நல்ல முயற்சி!

பாராட்டுகள்!

கீழ்க்கண்ட இடங்களில் கவனம் செலுத்தின் செப்பமுறும்.

ஏதும் செய்யா
உற்றது உரைத்தல்
உவகை மற்றது
ஈயின் மற்றது

அன்புடன்,
சி.மு.

செல்விஷங்கர் said...

சி.மு

தளை தட்டும் தவறுக்கு வருந்துகிறேன். கவனம் செலுத்துகிறேன்

சுட்டிக்காட்டியமைக்கு நன்றி

அகரம் அமுதா said...

வணக்கம் செல்விஷங்கர்! தாங்கள் என்னைக்கருதி அழைத்தமைக்கென் முதற்கண் நன்றிகள்.

அழகாகவும் ஆழமாகவும் சிந்தித்திருக்கிறீர்கள். வாழ்த்துகள்.

சிற்சில இடங்களில் சரிசெய்தால் மேலும் செழுமையடையும் என்பது என்கருத்து.

முதற்குறளைச் சற்றே மாற்றலாம்.

///செய்க நலந்தனை; இல்லெனில் யாதொன்றும்
செய்யா திருத்தல் சிறப்பு.///

அதுபோல் ஐந்தாம் பாடலையும் சற்றே மாற்றலாம் இப்படி. பொருள் தங்களுடையதுதான் மாறாது.

///போராடிப் பெற்றதெலாம் பூமியில் என்றுமே
வேரோடி நிற்கும் விளைந்து!///



இறுதிப் பாடல் எப்பொருள்பட எழுதியுள்ளீர்கள் என அறியமுடியவில்லை. ஆனால் கொண்டு கூட்டுப்பொருள் கோள் அணிவிகையில் ஆயுங்கால் பொருளை முழுதுமாக உணரமுடிகிறது.

வெந்து தணிந்த நிலமெலாம் நீர்சொரிய
வந்து குளிருமா வான்.

(இயல்பாகப்பார்த்தால் ஈற்றடிக்கு என்ன பொருள்? "வந்து குளிருமா வான்" -வான் ஏன்குளிரவேண்டும்? நிலத்தையல்லவா குளிர்விக்க வேண்டும்!). ஆனால் கொண்டுகூட்டிப்பார்த்தால் அழகாக விளங்குகிறது. அதாவது "வானம் வந்து நீர்சொரிய வெந்துதணிந்த நிலமெலாம் குளிருமா?" எனக்கொண்டால் சரியாக இருக்கும் எனக்கருதுகிறேன். ஆக இதிலும் ஒரு சிக்கல் வான்நீர்பொழிய காய்ந்த நிலம் குளிரவே செய்யும். ஆக குளிருமா என்பதை விடுத்து அவ்விடத்தில் "குளிருமே" என்றிட்டால் நன்றாயிருக்கும் என்பது என்கருத்து.

வெந்து தணிந்த நிலமெலாம் நீர்சொரிய
வந்து குளிருமே வான்.

இவ்விடத்தும் ஓர் சிக்கல் "வெந்து தணிந்த நிலமெலாம் " என்றெழுதியுள்ளீர்கள். அதாவது காய்ந்த, வெப்பமடைந்த நிலமானது எப்பொழுது குளிர்ச்சியடையும்? மழைநீர்பொழிந்தபிறகல்லவா? ஆனால் நீங்கள் "வெந்து தணிந்த நிலம்" என்றெழுதியுள்ளீர்கள். நிலமானது வெக்கையிலிருந்து தணிவதற்கு மழைவேண்டும். நிலமானது வெக்கையிலிருந்து தணிந்தபின் மழை எதற்கு வேண்டும்? ஆக இவ்விடத்தில் "வெந்து வறண்ட நிலமெலாம்" என வரைந்தால் சிறக்கும் எனக்கருதுகிறேன். திருத்திய பாடல் இப்படி வரவேண்டும்.

வெந்து வறண்ட நிலமெலாம் நீர்சொரிய
வந்து குளிருமே வான்.

அகரம்.அமுதா

செல்விஷங்கர் said...

அகரம் அமுதா,

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

நடைமுறை இயலில் தோன்றிய கருத்தை குறள் வடிவில் வடித்தேன். இலக்கிய நடையை எண்ணத்தில் கொள்ள வில்லை. தங்கள் திருத்தம் நன்றே ! கருத்தினை நினைவ்வில் கொள்கிறேன்.

நன்றி