Thursday, December 15, 2011

இயற்கையைக் காப்போம்

வானம் நமக்கொரு போதி மரம் ! நாளும் புவிக்கொரு சேதி சொல்லும் ! ஆனால் இன்று வனங்களை அழித்து வாழ்வாதாரத்தைப் பெருக்குவதால் அந்த இயற்கைப் பரப்பும் மாசு படர்ந்து விட்டது. ஞாயிற்றைப் போற்றுவதும் திங்களைப் போற்றுவதும் மாமழையைப் போற்றுவதும் நம் மரபு. காடு மலைகளை வணங்குவதும் மரம் செடி கொடிகளை வாழ்த்துவதும் நம் மக்களின் பாரம்பரியம். ஏரி குளங்களை மலர் தூவி விளக்கிட்டு வணங்குவர் நம் மக்கள். கோடை காலத்தில் தெய்வங்களைக் குளிர்விக்க பூக்களைச் சொரிவதும் குளிர் காலத்தில் கார்த்திகை விளக்கிட்டு மகிழ்வதும் இம்மண்ணின் மாண்பு. இந்தப் பழக்க வழக்கங்கள் எல்லாம் நம் முன்னோர் இயற்கையைக் காப்பதற்காக ஏற்படுத்திக் கொண்டவை. ஆனால் இயந்திர மயமாகி விட்ட இன்றைக்கு நாம் இயற்கைச் சூழலைக் காப்பாற்றத் தவறி விட்டோம். செயற்கைப் பழக்க வழக்கங்களால் சுற்றுச் சூழலை மாசு படுத்துகின்றோம். சுவாசிக்கின்ற காற்றைக் கூட ஆக்சிசன் செண்டர்களில் பெற வேண்டிய நிலைமைக்கு ஆளாகி விட்டோம். குடிக்கின்ற தண்ணீர்தான் இன்றைக்கு நம் நாட்டின் முதல் தரத் தொழிற்சாலை.


விளைகின்ற நிலம் கூட செயற்கைச் செறிவூட்டப்படுகின்றது. பயிர் வளர்ச்சியோ உரங்களைப் பொறுத்து அமைகின்றது. சூரிய ஒளி ஒன்றுதான் இன்னும் மாசு படுத்தப்படவில்லை. காரணம் அது நம்மைச் சுட்டெரிப்பதாலோ ! காற்று மண்டலம் கூட பூமியால் மாசு பட்டுக் கொண்டே வருகின்றது. சுவரில் ஆணி அடிப்பது போல ஓசோன் படலத்திலும் ஓட்டை போட்டுக் கொண்டே இருக்கின்றோம். இதில் மட்டும் உலக நாடுகளில் வளர்ந்த நாடு வளர்ந்து வரும் நாடென்ற வேறுபாடெல்லாம் இல்லை ! அவ்வளவு ஒற்றுமை உலகை உருக்குலைத்ததில் ! காற்று - நீர் - மழை - மலை - காடு - ஏரி - குளம் - நிலம் - என்று எல்லாவற்றையும் கெடுத்துக் குட்டிச் சுவராக்கி விட்டோம். இதில் நாம் மட்டும் என்ன உருப்படியாய் இருக்கின்றோம் ? தீராத நோய்கள் நம்மில் குடி கொண்டு இருக்கின்றன. வளரும் இளந்தளிர்கள் வகை வகையான நோய்களுக்கு ஆளாகின்றன. ஆக மொத்தத்தில் இயற்கையைப் பழி தீர்த்துக் கொண்டு விட்டோம் ! இன்னலுக்கு ஆட்பட்டுக் கிடக்கின்றோம் !


இனி நாம் செய்ய வேண்டியது என்ன ? காப்போம் ! காப்போம் ! இயறகையைக் காப்போம் ! என்று முதலில் ஒரு சூளுரை ஏற்க வேண்டும். அடுத்து நம்மைச் சுற்றி உள்ளவர்களிடம் இயற்கையை அழிக்காதவாறு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். பின்னர் நாம் செயல்முறையில் இறங்க வேண்டும். முதலில் வீட்டிற்கொரு மரம் வளர்க்க வேண்டும். அடுத்து குப்பை கூளங்களைக் கண்ட இடத்தில் கொட்டாமல் தரம் பிரித்து இந்தப் பாழாய்ப் போன பாலீதினை முதலில் ஒழிக்க வேண்டும். உள்ளூரில் உள்ள நீர்நிலைகளைத் தூர் வாரி ஏரி குளங்களின் கரைகளை உயர்த்தி அருகில் மரங்களை நட்டு மழை நீர் சேகரிப்புக்கு வழிவகை செய்ய வேண்டும். நம் சமுதாயத் தொண்டும் வழிபாடும் ஒன்றாக அமைய வேண்டும். என்னதான் காலங்கள் மாறினாலும் நாம் கடவுளைக் கும்பிட மட்டும் இன்னும் மறக்காமல் இருப்பது போல் இயறகைச் சூழலைப் பாதுகாக்க வேண்டும். மரங்களை நடுவதை மகேசன் தொண்டாகக் கருத வேண்டும்.


விளை நிலங்களில் கட்டடங்கள் கட்டுவதைத் தடுத்து நிறுத்த வேண்டும். சட்டத்தின் துணை கொண்டு தவ்று நடப்பதைச் சுட்டிக் காட்ட வேண்டும்; தட்டிக் கேட்க வேண்டும். நகரினுள் வரைமுறை மீறிய கட்டுமானங்களுக்கு நாம் வழிவகை தேடக் கூடாது. தொழிற்கூடங்கள் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்குப் பெருந்துணை புரிகின்றன என்றால் அதை விடச் சுற்றுச் சூழலுக்குப் பெருங்கேடு விளைவிக்கின்றன. நிலத்தடி நீரை மாசுபடுத்தும் தொழிற்சாலைக் கழிவுகளை மறு சுழற்சி செய்து மண்ணின் மணம் மாறாமல் மரம் வளரத் துணை செய்ய வேண்டும். இன்றைக்குக் கல்வி அறிவிற்குக் குறைவே இல்லை ! அனைவரும் அனைத்துத் துறையிலும் கற்றுத் துறை போகின்றனர். ஆனால் குறுக்கு வழியில் கொள்ளை இலாபம் பெறவே அந்த அறிவைப் பயன் படுத்துகின்றனர்.


சுற்றுச் சூழல் மாசினை ஒழிக்க முடியாமல் கழிவுப் பொருளைக் கரை சேர்க்க வழி இல்லாமல் உலக நாடுகள் எல்லாம் தட்டுத் தடுமாறிக் கொண்டிருக்கின்றன. ஆனால் நம் நாடோ இயற்கை வளமும் அழிவினில் ஆக்கமும் பெறுவத்ற்கேற்ற சூழலும் கொண்ட நாடு. ஆனால் இங்குள்ள மக்க்ளோ அடிப்படைத் தூய்மையைக் கூடக் க்ற்றுக் கொள்ள மனமில்லாதவராய் இருக்கின்றனர். வளர்கிறது இந்தியா ! ஆனால் அடித்தட்டு மக்களை அந்த வளர்ச்சியில் பங்கு கொள்ள இயறகையை நோக்கி அழைத்துச் செல்லத் தயங்குகிறது ! நாம் ஓவ்வொருவரும் நம்மைப் போன்ற ஒவ்வொருவரையும் நாட்டை வளமாக்க அழைத்துச் செல்வோம் ! காடுகளை அழிக்காமல் மலைகளைத் தகர்க்காமல் மண் வளத்தைத் திருடாமல் நீர் நிலைகளைக் கழிவு நீர்கள் கலக்காமல் நீராதரங்களில் நிலத்தடி வளத்தைச் சுரண்டாமல் செயற்கைக் கருவிகளால் கரியமில்வாயுவைப் பெருக்காமல் புவி வெப்பமடைதலைத் தடுக்கும் வழிமுறைகளைக் கடைப்பிடித்து, இருக்கின்ற நீர் நிலைகளைப் பாதுகாத்து நிலங்களை வளப்படுத்துவோம் ! மறந்து போகின்ற - மறைந்து போகின்ற வேளாண் தொழிலை புது முறைக் கல்வித்துறைகளால் மேம்படுத்தி மேதினியைக் காப்போம்.


காக்கை குருவி எங்கள் ஜாதி !
காடும் மலையும் எங்கள் கூட்டம் !
நோக்க நோக்கக் களியாட்டம் !
என்ற இயற்கைக் கவிதையை மீண்டும் பாடுவோம்.


காணி நிலம் வேண்டும் பராசக்தி !
அந்தக் காணி நிலத்திடையே ஒரு மாளிகை கட்டித் தர வேண்டும் !
அங்கே கேணி அருகினிலே பத்துப் பதினாறு தென்னை மரம் பக்கத்தில் வேண்டும். அந்த மரத்திடையே கத்தும் குயிலோசை சற்றே வந்து என் காதில் விழ வேண்டும். இந்த இயறகைச் சூழலை இன்றைக்கு உருவாக்குவோம்.


இயற்கையைக் காப்போம் ! எதிர் காலச் சமுதாயத்தை ஏற்றமுறச் செய்வோம் ! எதிரெதாக் காக்கும் அறிவினார்க்கு இல்லை அதிர வருவதோர் நோய் !என்ற வேத மந்திரத்தை விளக்கமுறச் செய்வோம் ! வருங்காலச் சமுதாயத்தை வளமுறக் காக்க இயற்கையைப் போற்றி வாழ்வோம் ! இனிய உலகைப் படைத்துக் காட்டுவோம் !!!



செல்வி ஷங்கர்


4 comments:

செல்விஷங்கர் said...

சோதனை மறுமொழி

தருமி said...

பரிசுக்கு வாழ்த்துகள்.

செல்விஷங்கர் said...

வாழ்த்திற்கு நன்றி தருமி அண்ணே

வெங்கட் நாகராஜ் said...

அழைப்பிதழ்:

உங்களது இந்த இடுகையை, இன்றைய வலைச்சரத்தில் ”காந்தள் மலர் - விழிப்புணர்வுச் சரம்” என்ற தலைப்பின் அறிமுகம் செய்திருக்கிறேன்.

http://www.blogintamil.blogspot.in/2012/04/blog-post_07.html

வலைச்சரத்திற்கு வந்து பார்வையிட அன்புடன் அழைக்கிறேன்.

நட்புடன்

வெங்கட்.