Wednesday, July 2, 2008

செய்தவம் ஈண்டு முயலப்படும் - குறள் பற்றிய ஒரு பதிவு

ஒவ்வொரு செயலுக்கும் ஓர் எதிர் விளைவு உண்டு. இது இயற்கை. விதைத்த விதை முளைப்பதும், முளைத்த செடி வளர்வதும், வளர்ந்த மரம் காய்ப்பதும், காய் கனியாவதும், கனி மீண்டும் விதையாவதும் அடுத்தடுத்த விளைவுகளே !

விடாமுயற்சியோடு செயல் பட்டால் வெற்றி நிச்சயம் என்பது மக்களின் பட்டறிவு. எதிர்த்துப் போராடும் போராட்டக் குணமும், அடக்கி ஆள்கின்ற ஆதிக்க மனமும், வளர்ச்சி காண ஆள்கின்ற அரசும், செயல்களின் சேர்க்கையால் பெற்ற பெரும்பயனே !

தவமென்றால் காட்டிற்குச் சென்று கண்ணை மூடிக்கொண்டு செய்வதல்ல. மனத்தால் அக வாழ்வைத் துறந்து புறத்தால் புற வாழ்வை மேற்கொண்டு துன்பப்படுபவரின் துயர் துடைப்பதே தவம். இது வள்ளுவப் பெருந்தகையின் வாய்மொழி. எப்படித்தான் அவரால் இப்படி எல்லாம் சிந்திக்க முடிந்ததோ ! அறிந்த வரையில் சமுதாயத்தின் ஒரு சாமானியனாய் இருந்திருந்து, சர்வாதிகார அரசுக்கெல்லாம், சமுதாயத்திற்கெல்லாம் எப்படித்தான் சட்டத்தை வகுத்தானோ !

இயலாமையைக் காரணம் காட்டி இவ்வுலகில் எதையுமே செய்யாமல் எத்தித் திரிகின்ற மனப்பான்மை உள்ள மக்களிடையே, சிறிதும் இயலாதவர்கள் கூட பிறருக்கு கை கொடுக்க நினைக்கின்ற எண்ணம் மிகவும் உயர்ந்தது. அது எல்லோராலும் முடிந்ததன்று. இதைச் சொல்கின்ற போது கண்ணதாசனின் சில கருத்துகள் என் நினைவிற்கு வருகின்றன. செருப்பு இல்லை என்பவன் காலில்லாதவன் நிலையை நினைத்துப் பார்க்க வேண்டும் என்று கூறி தன் யதார்த்த வாழ்க்கையையே அர்த்தமுள்ள இந்து மதமாக்கிக் காட்டியது கூட ஒரு வகையில் தவம்தான்.

எண்ணியவற்றை எண்ணியவாறே பெறுவர் - விடாமுயற்சியோடு செயல்படுபவர். இவ்வுலகில் செயல்களைச் செய்யக் கூடியவன் மறு உலகிலும் அதன் பயனைப் பெறுவான். அதுவே தவம். அதனால் தான் அத்தகைய செயல்கள் இங்கும் செய்யப் படுகின்றன. நம் ஒவ்வொரு செயலும் நம் மறுமைக்கு வழி காட்டுவதாய் இருத்தல் வேண்டுமென்பது தான் அனைத்து வேதங்களின் சாரம்.

தன்னுடைய செயல்களைத் தானே செய்துகொள்ள முடியாத நிலையிலும், நான் ஒன்றைச் செய்வேன்; செய்வதன் மூலம் பயன்பெறுவேன்; பெற்ற பயனைப் பிறருக்குக் கொடுப்பேன்; அதுவும் என் போன்று இயலாதவற்கு ஏழ்மையைப் போக்க உதவுவேன் என்கின்ற இந்த நூற்றாண்டுக் கர்ணன் அந்தோணி முத்து செய்தவம் ஈண்டு முயலப்படும் என்றால் செய்தே முடித்துக்காட்டுவான். அவனின் செயல்பாடுகள் இணையத்தில் எல்லோரூம் அறிந்தது தானே ! அப்படி என்றால் இயலாதவர்க்கு மட்டும் தான் முயற்சி என்பதல்ல. அனைவருமே விடா முயற்சியோடு செயல்பட்டு செயல்பயனைப் பெற வேண்டும் என்பது தான் செய்தவத்தின் பொருள். இங்கே செய்தால் அங்கே கணக்கில் கொள்ளப்படும் ! இது எந்தக் கணக்கியல் தத்துவத்திலும் இவ்வுலகில் அடங்காது.

செல்வி ஷங்கர் - 02.07.200811 comments:

cheena (சீனா) said...

நல்ல பதிவு - நன்று - நல்வாழ்த்துகள்

அந்தோணி முத்துவிற்காக ஒரு பதிவிட்டமைக்கு நன்றி

அந்தோணி முத்து said...

அன்புள்ள அம்மா,

இதுவரயில் எவரும் எனக்குச் செய்திராத உதவியை,
இன்று எனக்கு நீங்கள் செய்துள்ளீர்கள்.

சோர்ந்து போயிருந்த மனம்,
புதுத் தெம்புடன் உயிர் பெற்றிருக்கிறது.

இந்தச் சிறியவனின் வேண்டுகோளுக்காக,
"நான் வணங்கும் அந்த எல்லையற்ற, பெயரற்ற, மகாசக்தியே முன்தோன்றி வரமளித்ததைப் போல" ஒரு பதிவை நீங்கள் இட்டதை நினைக்கும்போதே கண்ணீர் முட்டுகிறது.

//எண்ணியவற்றை எண்ணியவாறே பெறுவர் - விடாமுயற்சியோடு செயல்படுபவர். //

இந்த வரிகள் எனக்கு மட்டுமல்ல.
ஒவ்வொரு மனித ஜீவனும் நினைவில் கொள்ள வேண்டிய வரிகள் இவை.

ஆறே வார்த்தைகள்தான்.
அதை,
இத்தனைத் தெளிவாக,
எளிமையாக,
அரைப்பக்கத்திற்குள் விளக்கி,
இப்படி முழு வாழ்க்கைக்குமான, பாடத்தைத் தர திருவள்ளுவராலும்,
என் அம்மாவினாலும் மட்டும்தான் முடியும்.

சதங்கா (Sathanga) said...

அருமை. செய்தவத்தினை அழகாக சொல்லி, விடாமுயற்சி, பிறருக்கு உதவுதல் பற்றிக் கூறியது அழகு.

ஜீவா (Jeeva Venkataraman) said...

அதனை எடுத்துச் சொன்னமைக்கு நன்றிகள், அதுவும் எங்கள் தவப்பயனே.

அகரம்.அமுதா said...

விடா முயற்சி பற்றி மிக அழகிய கட்டுரையை வழங்கியுள்ளீர்கள் வாழ்த்துக்கள்.!

திகழ்மிளிர் said...

/தவமென்றால் காட்டிற்குச் சென்று கண்ணை மூடிக்கொண்டு செய்வதல்ல. மனத்தால் அக வாழ்வைத் துறந்து புறத்தால் புற வாழ்வை மேற்கொண்டு துன்பப்படுபவரின் துயர் துடைப்பதே தவம். /

அருமையான வரிகள்

செல்விஷங்கர் said...

அந்தோணி முத்து,

வள்ளுவத்தைப் படித்தால் வாழ்க்கைக்கு வழி தோன்றும். இரண்டடியால் உலகை அளந்த வள்ளுவனை எண்ணி எண்ணி மெய் சிலிர்ப்பதுண்டு. ஐந்தாம் வேதம் என்றால் இதுதான் போலும். மனிதன் மனிதனுக்குச் சொன்ன வேதமிது. நம்மை எப்போதும் துன்பத்திலிருந்து கை தூக்கி விடும். நல்ல எண்ணங்கள் நம்மை நன்றாய் வாழ வைக்கும். எண்ணங்கள் ஈடேற நல்வாழ்த்துகள்

செல்விஷங்கர் said...

சதங்கா

விடாமுயற்சியே தவமென்பதை வள்ளுவத்தால் தான் அறிந்தேன். தத்துவங்களே செயல் முறையாய் விளக்கிக் காட்டும் கருத்துகள் குறளில் பெரிதும் காணப்படும்.

வருகைக்கு நன்றி

செல்விஷங்கர் said...

ஜீவா,

கருத்துகள் புரிகின்ற போது சொல்வதில் ஒரு சுவையும் தானே இருக்கும். நன்றி

செல்விஷங்கர் said...

அகரம் அமுதா,

விடா முயற்சி என்ற ஒன்று
இருந்தால் போதும். வெற்றிகளை நாம் எப்படியும் பெற்று விடலாம். நன்றி

செல்விஷங்கர் said...

திகழ்மிளிர்,

பாரதியையும் வள்ளுவனையும் படித்த போது தான் எனக்கு இந்த எண்ணம் தோன்றியது. பாரதியின் புரட்சிக் கருத்துகளில் இதுவும் ஒன்று. வள்ளுவன் எவராலும் செய்ய முடியாத கருத்துப் புரட்சியை நூல் முழுவதும் காட்டி இருப்பான். நன்றி