Tuesday, July 22, 2008

உலகம் மலரும் !

நேற்றுப் பெய்த
மழைத் தூறல் !
சற்றே தழைத்த
ஈர மண் !
இயற்கை அளித்த
இன்பப் பரிசு !

அங்கும் இங்கும்
மேயும் ஆடுகள் !
அழகாய்ப் பறக்கும்
குருவிகள் ! ஆற்றின்
கரையில் கீரைப்
பாத்தி ! நீரோ
ஓடை நீர்தான் !
பாறைகள் தெரிய
செடிகள் முளைத்து
கொடிகள் படர்ந்த
பச்சைப் புல்வெளி !

நனைந்த சாரலில்
நிறைந்த நீர்மணல் !
காயும் வெய்யில்
சற்றே ஓய்ந்து
ஈரக் காற்றுடன்
இரவியின் கதிர்கள் !

காலில் செருப்பு
கையில் கொம்பு
தோளில் துண்டு
எண்ணெய் இன்றி
வறண்ட தலையை
கோதிய விரல்கள் !
கண்கள் சுருக்கி
காணும் கால்நடை
கையால் ஒதுக்கி
குனிந்து நடக்கும்
முதிர்ந்த மேய்ப்பான் !

ஏதோ இன்னும்
இயற்கையை நினையும்
ஈரப் புல்வெளி !
மாலை நேரம்
மேகம் மயங்கி
மரங்கள் அசைய
வீசிய காற்றில்
விண்ணில் இருந்து
ஓரிரு துளிகள் !

இதற்கே இத்தனை
ஈரம் என்றால்
சுற்றுச் சூழல்
காற்று ! மழைநீர்
மறித்துத் தேக்கி !
குப்பை கூளம்
கூர்ந்து அகற்றி !
தூரும் வாரி !
தூற்றிய மணலால்
கரைகள் உயர்த்தி !
கன்று மரங்கள்
கணக்காய் நட்டால்
நாடு செழிக்காதா ?

வெப்பக் காற்று
மறைந்து ! பூமி
குளிர்ந்து ! தூய
காற்று வீசாதா ?
பூமி வெப்பம்
தணியத் தணிய
தாரணி செழிக்காதா ?

மலையும் பனியும்
நகர்வது நின்றால்
நானிலம் அதிராதே !
ஆருயிர் அழியாதே !
காப்போம் காப்போம் !
இயற்கை காப்போம் !
உலகம் செழிக்க
உயர்ந்திடும் மரங்கள்
உவப்பாய் நடுவோம்!
உள்ளம் மகிழ்ந்தால்
உலகம் மலரும் !

செல்வி ஷங்கர் - 22082008

11 comments:

செல்விஷங்கர் said...

இயற்கையைக் காப்போமா ?

சதங்கா (Sathanga) said...

மழை பெய்தலும், ஈரம் காய்வதும், ஆடுகள் மேய்வதும், என பலவற்றையும் கூறி, அந்த இடத்தை மனக் கண் முன்னே கொண்டு வந்திருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்.

ராமலக்ஷ்மி said...

இயற்கை அளித்த இன்பப் பரிசுகளையில்லாம் ஒவ்வொன்றாகச் சொல்லி //காப்போம் காப்போம் !
இயற்கை காப்போம் !
உலகம் செழிக்க
உயர்ந்திடும் மரங்கள்
உவப்பாய் நடுவோம்!//
என நீங்கள் விடுத்திருக்கும் அழைப்புக்கு கொடுக்கட்டும் உலகம் ஒத்துழைப்பு!

Noddykanna said...

மாறும் மனிதர்,
மாற்றுகிரார் இயற்கையை!
வேண்டும் மாற்றம் யாதெனத்தெரியாமல்!

இயற்கை நோக்கி,
ஈர்ப்பு நேர்ந்தால்,
எல்லாம் நலமாகும்!
இயற்கை வசமாகும்!

நல்ல கருத்து, நடப்பில் அவசியம் எல்லோரும் சிந்திக்க வேண்டிய ஒன்று!

-- நாடிக்கண்ணா

NewBee said...

செல்வி அம்மா,

நலமா? :)

//நனைந்த சாரலில்
நிறைந்த நீர்மணல் !
//

படிக்கும்போழ்தே ஈரம் உணர்கிறேன்.

//மலையும் பனியும்
நகர்வது நின்றால்
நானிலம் அதிராதே !
//

அருமை!

//இதற்கே இத்தனை
ஈரம் என்றால்
சுற்றுச் சூழல்
காற்று ! மழைநீர்
மறித்துத் தேக்கி !
குப்பை கூளம்
கூர்ந்து அகற்றி !
தூரும் வாரி !
தூற்றிய மணலால்
கரைகள் உயர்த்தி !
கன்று மரங்கள்
கணக்காய் நட்டால்
நாடு செழிக்காதா ?
//

ஆஹா! காட்சி கண் முன்னே விரிந்து, சுத்தக்காற்றை சுவாசிக்கும் புத்துணர்ச்சி பெறுகிறேன்.

நடந்தால் எத்தனை நன்றாய் இருக்கும்.

NewBee said...

வெறும் வார்த்ததகள் இல்லையம்மா. காட்சிகளைக் கண்முன்னே விரிக்கும் ஓவியம்.

கவிதை நன்று. வாழ்த்துகள் அம்மா :))

செல்விஷங்கர் said...

சதங்கா

மழை பெய்த இடம் நம் மனத்தைக் கவர்வது இயற்கை. அதை எழுத்தில் நிறுத்தினேன். வருகைக்கு நன்றி

செல்விஷங்கர் said...

ராமலக்ஷ்மி

இயற்கையைக் காக்கா விட்டால் -
என்று நாம் நினைத்துப் பார்த்தால் நம் உள்ளம் ஆழக்கடலில் ஆழ்வது போல் ஒரு நினைவு. எப்படியாவது இயற்கையைக் காக்க நாம் முயல வேண்டும்

செல்விஷங்கர் said...

நாடிக்கண்ணா,

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

இயற்கை மாற்றம் நம்மால் ஏற்படுகிறதென்றால் அதை எப்படியாவது வளமைக்குக் கொண்டு போக வேண்டாமாஅ ? முயல்வோம்.

செல்விஷங்கர் said...

புது வண்டே

இயற்கை வெப்பமடைவதை எப்படியாவது தடுத்து விட வேண்டும் - எளிய முயற்சிதானே ! மரம் வளர்ப்பதும் இருக்கின்ற மரங்களைக் காப்பதும் - அதைச் செய்ய வேண்டும் என்று கண்ணெதிரே காட்சிகள் விரிகின்றன

செல்விஷங்கர் said...

புது வண்டே

கருமேகங்கள் திரண்ட போது காற்று வீசும் பலகணியில் அமர்ந்திருந்தேன். அத்தனைப் பரப்பும் என் கண்களில் பட்டன. அவற்றை அப்படியெ எளிய சொற்களில் எழுதினேன். எனக்கே நன்றாய் இருந்தது. இயற்கை மகிழ்ச்சி தான்