Sunday, July 13, 2008

இமயப்பூவே இந்திரா !

இவ்விரங்கற்பா இந்தியத் துணைக்கண்டத்தின் அன்றைய பிரதமர் திருமதி இந்திரா காந்தி மறைந்த போது, எழுதப்பட்டு, அகில இந்திய வானொலியில், சிறுவர் சோலையில் என் செல்ல மகளால் படிக்கப் பட்டது.
-------------------------------------------------
இமயப்பூவே இந்திரா !

இந்திய வரலாறு இந்திரா இல்லாமலா ?
எண்ணிப் பாரா இமயப்பூவே ! இந்திரா !
உன்னைப் பாரா இந்தியா ! இந்தியாவா ?
இத்தனை அமைதி ! இத்தனை அமைதி !
எங்கே உறங்குகின்றாய் ?

செந்நீர்ப் பெருக்கினை காணிக்கை ஆக்கினாய் !
ஏனெங்கள் கண்ணீர்ப் பூக்களைக் காணவா ?
நீ தீட்டாத திட்டமில்லை ! தீர்க்காத சிக்கலில்லை !
விதிக்காத சட்டமில்லை ! விலக்காத நீதியில்லை !
நின் நிகழ் காலத் திட்டங்கள் நிலையாய் உள்ளன !
அரசியல் வரலாற்றில் நீயொரு பொன்னேடு !
நின் பொன்னேட்டின் பக்கங்கள் புகழாரம் சூடும் !

இனம் வேறு ! மொழி வேறு ! மதம் வேறு !
என்று வேறுபட்ட பாரதத்தை ஒன்றாக்கினாய் !
மிக நன்றாக்கினாய் ! உலக ஒற்றுமைக்கு
குரல் கொடுத்தாய் ! வேற்றுமைக்கு கையசைத்தாய் !

மூன்றாம் உலகப் போரினை முறியடித்தாய் !
நடுவு நிலைமை நாடுகளை உருவாக்கினாய் !
கூட்டுச் சேராக் கொள்கையிலே குரல்கொடுத்தாய் !
அணுவால் அழியும் அகிலத்தைக் காத்தாய் !

அத்தனையும் போதா தென்றாநீ ! துப்பாக்கிச்
சத்தத்தில் சிக்கி தீப்பொறி ஆனாய் !
அரண்மனைத் தோட்டத்து ரோஜாவே !
நின்றன் காஷ்மீரக் கதிர்ப் பூக்கள்
காலமெலாம் கதைபேசும்.

எத்தனையோ திட்டங்கள்
இதயத்தில் ஏந்தினாய்
என்றா ! இத்தனை
குண்டுகள் துளைத்தன !
இந்தஇதயமிலா மனிதரை
ஏனோநீ காணவில்லை !

ஏற்றமிகு தோற்றத்தால் !
எடுப்பான சொல்லால் !
போற்றுகின்ற பண்பால் !
பொலிவான உடையால் !
புன்னகைப் பூக்களை !
பூக்கும் நீ !
அதிகாரம் ஆதிக்கம் செய்யும் போதே !
அங்கங்கே சிதறும் செந்நிறத் துளிகள் !
இங்கேயும் சிதறும் என்பதை மறந்தாயே !

எத்தனை இந்திரா உன்னால் இங்கே !
இனியெங்கே ஜவகரின் இந்திரா இங்கே !
கவிக்குலத்து மேதைநீ !
காவியத்தின் சீதைநீ !
காரிகையாய் வந்ததொரு கீதைநீ !

இனியும் இதயங்கள் வெடிப்பதால்
இந்திராவின் இந்தியா வடிக்கப் படுவதில்லை !
கலங்காத நெஞ்சம், எங்கும்
காற்றாக இயங்கும் என்றா ?
காவலனே கலைத்தான்
நின்னுயிர்க் கூட்டை !
கூடுதான் கலைந்தது !
கொள்கைகள் நிலைக்கும் !
இனிவரும் இந்தியா
நின்பூக்களைச் சூடும் !

கதறாத நின்னைக் கதற வைத்தார் !
காவலரா அவர் ? இல்லை ! இல்லை !
காரிகைநீ சிந்திய ரத்தம் ஒவ்வொரு
துளியும் நின் புகழ் பேசும் !
ஒற்றுமைப் பூக்களே இந்தியா !
இல்லை ! இல்லை ! இந்திரா !
==================================
ஒலி வடிவத்தினைக் கேட்க :



--------------------------------------------------

36 comments:

செல்விஷங்கர் said...

கவிதையினைப் படித்து கருத்துக் கூறுக !

நிஜமா நல்லவன் said...

இன்றளவும் எனது ஏக்கமெல்லாம் இந்திரா போன்றொரு தலைமை இந்தியாவுக்கு மீண்டும் கிடைக்குமா என்பதே. இந்திரா காந்தியின் நெஞ்சுறுதியில் ஒரு பங்கு கூட இன்றைய தலைவர்களிடத்தில் இல்லையே? கவிதையில் மிகையொன்றும் இல்லை. நன்று.

செல்விஷங்கர் said...

பாரதி,

உண்மை உண்மை - இந்திரா என்றாலே ஒரு துணிவு மிக்க நங்கை - கூரிய சிந்தனை - மறக்க முடியுமா ?

NewBee said...

செல்வி அம்மா,

நலமா? :)

எத்தனை வருடங்கள் போயின? சொற்களின் வலிமை இன்னமும் வலிக்கின்றன.

Such powerful words, with amazing thoughts.

மனதில் நினைப்பதை சொற்களாய் வடிப்பது, ஒரு குழந்தையைப் பிரசவிப்பது போன்றதே. :)

வாழ்த்துகள் அம்மா! தொடர்ந்து நிறைய நிறைய, நிரைய நிரைய எழுதுங்களேன்.

சதங்கா (Sathanga) said...

அப்ப நான் பள்ளிக்கூட மாணவன். இந்திராவை சுட்டுவிட்டார்கள் என்று சொல்லி லீவு விட்டார்கள். அவரது ஆட்சி எப்படி இருந்தது என்றெல்லாம் தெரியாது. ஆனால் அவர் ஒரு போல்டான பெண்மணி என்பது எங்கள் வீட்டில் பெரியவர்கள் பேசுவார்கள், கேட்டிருக்கிறேன். கவிதை நன்று மேடம்.

Sanjai Gandhi said...

ஆஹா.. அற்புதம்.. இதை எனது கைசின்னம் வலைப்பூவில் பயன்படுத்த அனுமதி கிடைக்குமா?

செல்விஷங்கர் said...

புது வண்டே

மலரும் நினைவுகள் - பிள்ளைகளை நினைக்கையில் படித்ததும் நிகழ்ந்ததும் பறந்து ( பிறந்து) வந்து கொண்டே இருக்கிறது. உன் பிள்ளைக்கும் சொல்லிக் கொடு - நிச்சயம் உன்னைப் போல் வருவார்கள்.

//Such powerful words, with amazing thoughts.//

மனம் நெகிழ்கிறது புது வண்டே !

எழுதுகிறேன் இன்னும் எழுதுகிறேன்

செல்விஷங்கர் said...

சதங்கா - இந்திராவை நினைத்தாலே நிமிர்ந்த தோற்றமும், கூரிய மூக்கும் , சீரிய சிந்தனையும் மனதில் தோன்றும் அல்லவா ?

வருகைக்கு நன்றி சதங்கா

செல்விஷங்கர் said...

சஞ்செய் - கருத்துக்கு நன்றி - நல்ல கருத்துகளுக்கு உரிமை கொண்டாட முடியாது - எடுத்துக் கொள் - அனுமதி தேவைஎனில் அனுமதி வழங்கப்படுகிறது.

மங்களூர் சிவா said...

இந்திரா காந்தி ஆட்சியின்போது நான் மிக சிறுவன். அவரை பற்றி புத்தகங்களில் படித்ததுதான்.

அருமையான கவிதை வரிகள்.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

இந்திரான்னா எனக்கும் பிடிக்கும் ஏன்னா நாங்க ரெண்டுபேரும் பிறந்தது ஒரே நாள் தானே.. :)) நல்ல பா.

Thamiz Priyan said...

அற்புதமான ஆளுமைத் திறன் கொண்ட ஒரு பிரதமரை பெற்றிருந்ததற்கு இந்தியன் என்ற முறையில் பெருமையே... சில உள்நாட்டு தெளிவற்ற கொள்கைகளைத் தவிர்த்து... கவிதை நடையும் அருமை.. :)

செல்விஷங்கர் said...

சிவா

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சிவா

செல்விஷங்கர் said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி கயல்விழி

செல்விஷங்கர் said...

நன்றி தமிழ் பிரியன்

இந்தியாவின் தலை சிறந்த பிரதமர்களில் அவரும் ஒருவர் தானே

ஆயில்யன் said...

//மலரும் நினைவுகள் - பிள்ளைகளை நினைக்கையில் படித்ததும் நிகழ்ந்ததும் பறந்து ( பிறந்து) வந்து கொண்டே இருக்கிறது. உன் பிள்ளைக்கும் சொல்லிக் கொடு - நிச்சயம் உன்னைப் போல் வருவார்கள்.//

பாடமாக படித்துக்கொண்டேன் அம்மா நன்றிகளுடன் ! எதிர்பார்க்கிறேன் இன்னும்...!

Iyappan Krishnan said...

அற்புதம் :) இந்திரா போன்ற திறமையான தைரியசாலியான பிரதமர் மீண்டும் இந்தியாவிற்க்கு கட்டாயம் தேவை. ஹ்ம்ம்ம்ம்

ராமலக்ஷ்மி said...

இமயப் பூவுக்குக் கவிப் பூக்கள் தூவி மரியாதை செய்திருக்கிறீர்கள்! அப்போது நான் இளங்கலை இறுதி ஆண்டில். நாடே நடு நடுங்கியது. அதன் தாக்கத்தில் நான் எழுதிய கவிதாஞ்சலி என் உறவினரால் இரங்கற் கூட்டமொன்றில் வாசிக்கப் பட்டது. அதை அவரது நினைவு தினத்தன்று வெளியிட எண்ணம்.

குசும்பன் said...

இந்திரா மாதிரி துணிந்து முடிவெடுக்கும் திறமை இப்பொழுது இருக்கும் தலைவர்கள் யாருக்கும் இல்லை.

குசும்பன் said...

இந்திரா மாதிரி துணிந்து முடிவெடுக்கும் திறமை இப்பொழுது இருக்கும் தலைவர்கள் யாருக்கும் இல்லை.

செல்விஷங்கர் said...

ஆயில்யன்

படிப்போரும் கேட்போரும் இருந்தால் சொல்வதற்கும் சொல் வரும்; சிறந்த கருத்துகள் சிந்தனையில் தோன்றும்.

செல்விஷங்கர் said...

ஜீவ்ஸ்

ஆம். இந்திராவின் தோற்றமும் கருத்தும் பார்க்கின்ற போதெல்லாம் நெஞ்சில் நிமிர்வை ஏறபடுத்தும். அப்படி ஒரு தலைமை நாட்டிற்கும் வரட்டும். வருகைக்கு நன்றி

செல்விஷங்கர் said...

ராமலக்ஷ்மி

இமயப்பூவிற்கு கவிதைப் பூக்களெல்லாம் செயல் திறனின் வெளிப்பாடுகளே ! துணிந்து நிற்கும் தோற்றம் நமக்கு சொற்களாக நிற்கும்.
வருகைக்கு நன்றி

இரங்கற்பாவினை எதிர் நோக்குகிறேன்

செல்விஷங்கர் said...

குசும்பன்

எதற்கு இருமுறை மறு மொழி

இப்பொழுதும் தலைவர்களிடம் இருக்கிறது. ஆனால் அதனை ஏற்றுக் கொள்வதை விட எதிர்ப்பதே அதிகம்

Natchathraa said...

அம்மா உங்க கவிதையும் அருமை...அன்னை இந்திராவின் மரண தினம் என்னால் மறக்கவே முடியாது.....நாடெங்கும் கலவரம்...
எங்கள் வீட்டிலும் கூடத்தான்...அதுப்பற்றி தனியாக சொல்லுறேன்....
நீங்கள் அன்னையைப்பற்றி எழுதியவை அனைத்தும் அதி அற்புதம்...உங்களின் இந்த கவிதையினை அக்காவின் குரலில் இன்னும் அழகு...

அன்புடன்

நட்சத்திரா..

நானானி said...

பாரதி சொன்ன,'நிர்ந்த நன்னடையும்
நேர் கொண்ட பார்வையும்...கொண்ட
இந்திராவை போல் இனி ஒரு இந்திரா
நமக்கினி கிடைகாது. இளம் பிரதமராக அவர்தம் புதல்வர் போலும் கிடைக்காது.
இரு இழப்பும் உலககையே அதிர வைத்த இழப்புகள்!!
மனம் வலிக்கிறது செல்வி, கவிதையைப் படித்ததும்!

செல்விஷங்கர் said...

நானானி

பாரதி கண்ட புதுமைப் பெண்ணே நம் பாரதம் காத்த இந்திராதான். தேசியப் போராட்டக் காலத்தில் சிறுமியாய் இருந்த இந்திரா, தன் தந்தை நேருவால், அரசியல் வரலாற்றை அறிந்த அற்புதப் பெண்மணி. ஆம்.

செல்விஷங்கர் said...

நட்சத்திரா

இந்திராவின் மறைவு மறக்க முடியாத ஒன்று. மண்ணில் பூக்கின்ற மாண்புறு தலைவர்களில் அவரும் ஒருவர். அந்த வரலாற்றுப் பூ வாடா மலரே !

இனிமையான குரலில் கேட்டது தங்கையின் குரலா - அக்காவின் குரலா ?

Sanjai Gandhi said...

//இந்த கவிதையினை அக்காவின் குரலில் இன்னும் அழகு...

அன்புடன்

நட்சத்திரா..//
அடப்பாவி.. இப்டி எல்லாம் சொல்லி உன் வயச கொறைச்சிக்கிறயா? உன் தம்பி இங்க இருக்கான்னு தெரியாம சொல்லிட்டயோ?.. உனக்கு 48 வயசு ஆகுது.. அவங்க உனக்கு அக்காவா? :))

செல்விஷங்கர் said...

சஞ்செய்

இப்படியா நட்சத்திராவின் வயதைப் போட்டுடைப்பது - என்ன இருந்தாலும் பெண்ணல்லவா ?

Sanjai Gandhi said...

//சஞ்செய்

இப்படியா நட்சத்திராவின் வயதைப் போட்டுடைப்பது - என்ன இருந்தாலும் பெண்ணல்லவா ?//

அவ இப்டிதாம்மா ஊரை ஏமாத்திட்டு இருக்கா.. நான் இங்க இருக்கேனு தெரியாது போல :P

//என்ன இருந்தாலும் பெண்ணல்லவா//

ஹிஹி.. என்ன இருந்தாலும் என் அக்கா அல்லவா? எனக்கு தானே உண்மை தெரியும்.. :))

Anonymous said...

அம்மா எனக்கு சகோதரியின் வயது தெரியவில்லை....அதனால் ஏற்பட்ட குழப்பம்....அக்காவோ தங்கையோ குரல் இனிமையாக இருந்தது....

அன்புடன்

நட்சத்திரா...

Natchatra said...

//அடப்பாவி.. இப்டி எல்லாம் சொல்லி உன் வயச கொறைச்சிக்கிறயா? உன் தம்பி இங்க இருக்கான்னு தெரியாம சொல்லிட்டயோ?.. உனக்கு 48 வயசு ஆகுது.. அவங்க உனக்கு அக்காவா? :))//

அடேய் தம்பி சஞ்சய்...உனக்கும் எனக்கும் மாதக்கணக்கில் தான் வித்தியாசம்முன்னு நியாபகம் இருக்கா???...எனக்கு 48ன்னா உனக்கும் அதேதான்....இப்படியாடா 20 வருஷம் கூட்டிச்சொல்லுவே?????

அன்புடன்

நட்சத்திரா....

செல்விஷங்கர் said...

நட்சத்திரா,

உனக்கு அவள் அக்காதான் - மூன்று வயது மூத்தவள் - சரியா-

பொடியா - உனக்கும் 48 வயதாமே - அப்படியா !!!!!

ஜோசப் பால்ராஜ் said...

இந்திரா, இரும்புப் பெண்மணி.
சிறந்த ஆளுமைத்திறன். எடுத்தாற் கைப்பிள்ளையாக இல்லாது தானே சுயமாய் சிந்தித்து முடிவெடுக்கும் திறன்படைத்தவர். அவர் இருந்திருந்தால் இன் நேரம் ஈழப்பிரச்சனை ஒரு முடிவுக்கு வந்திருக்கும். அவரது இழப்பு தமிழர்களுக்குத் தான் பேரிழப்பு.

செல்விஷங்கர் said...

அன்பின் ஜோசப்

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி