Wednesday, May 12, 2010

ஊட்டி மலையில் உறவுகள்

பதிவர் உயர்திரு லதானந்த், இணைய நண்பர்களை குடும்பத்துடன், இரண்டு மூன்று நாட்கள் அவரின் விருந்தினராக, ஊட்டியில் வந்து தங்கி, வெம்மையைச் சற்றே மறந்து, உதகையின் குளுமையில் மகிழ்ந்து செல்லுமாறு அன்புடன் அழைத்து இருந்தார். அவ்வழைப்பினை ஏற்றுச் சென்ற சுற்றுலாப் பதிவு.

அது ஒரு அந்தி மாலைப் பொழுது ! அதுவும் மழைத் தூறல் சாரல் அடிக்கும் மாலை! சில்லென்ற காற்று வீசும் உதகை மலைச் சாலை ! வலைப்பதிவர்கள் சிலரைத் தாங்கிச் செல்லும் சிற்றுந்துகள் ! அழகான மச் சூழல் ! மரங்கள் அசைந்து வரவேற்கும் புல்வெளிக்கிடையே வீற்றிருக்கும் விருந்தினர் இல்லம். அங்கே ஒவ்வொருவராக வந்து சேர்ந்த பதிவர் குடும்பங்கள். ஆம் ! பிள்ளை குட்டிகள் மற்றும் துணைவியோடு வந்தனர். அறிமுகமே இல்லாத முகங்கள் - ஆனால் புன்னகைக்கும் உள்ளங்கள் ! புருவம் உயர்த்தும் புன்சிரிப்புகள்.கட்டித் தழுவி கை கொடுத்து மகிழும் ஐந்து குடும்பங்கள். ஆறாவதாய் வந்திணைந்த இளையவர் ஒருவர். இந்த இருபத்தொருவரையும் ஒருங்கிணைத்த உள்ளத்தார் லதானந்த்.

முன்பின் அறிந்திராத குடும்ப உறுப்பினர்கள் ! குடும்பத் தலைவர்கள் மட்டுமே வலைப் பதிவால் ஒருவரை ஒருவர் அறிந்தவர்கள் ! புன்னகைக்கும் முகங்களாய் ஒரு 30 மணி நேரத்தைச் செலவிட்ட பதிவர் குடும்பங்கள் ஆறும், ஐந்து விரல்கள் உள்ளங்கையில் இணைந்தது போல் உண்டு - உடுத்தி - உறைந்து - கண்டு - களித்து - கனிவாய் மலர்ந்து - இருந்த மலைப்பகுதி ! மலையை - மரங்களை - பள்ளத்தாக்குகளை - சிற்றருவிகளை - சிறு ஓடைகளை - பெரிய ஆற்றுப் படுகையைக் கண்டு மகிழ்ந்து காலாறச் சென்றனர்.

இருபத்தோறு பேரும் ஒரு மகிழ்வுந்தில் பாடி - பேசி - பழகிச் சிரித்து - மகிழ்ந்து - மரங்கள் அடர்ந்த் காட்டு வழியைக் கடந்து - கனிவான காட்சிகளை க்ண்ணுக்குள்ளும் புகைபப்டக் கருவிக்குள்ளும் அடக்கி - பெருமணற் பரப்பைக் காணச் சென்றனர். ஏறி இறங்கிய மலைப்பகுதியும் - சிற்றோடைப் பரப்பும் ஒரு புதிய அனுபவம் - புன்னகைக்கும் உள்ளங்களுக்கு !

விண்ணின் மழை மன்ணில் கலப்பது போல் - மலைக்காற்று - மரங்களிடைப் பரவி மண்ணை அடைவது போல் - கோவை - மதுரை - திருப்பூர் - திருச்சி என்று எங்கெங்கிருந்தோ வந்து இந்த ஊட்டி மலையில் உறவுகளோடு நட்பு மணம் பரப்பி, பேசி மகிழ்ந்த உள்ளங்கள் ! வயது வேறுபாடு இல்லை - நாலு, ஆறு, பத்து வயதுக் குழந்தைகளோடு, ஆடிப்பாடி மகிழ்ந்து - இளைஞர்களோடு பேசாமல் பேசி உறவாடி - பதிவர்கள் ஒருவருக்கொருவர் பேசி மகிழ - குடும்பங்கள் உறவாடி மகிழ்ந்தன !

ஒரு நல்ல பொழுதைப் போல் காலத்தைக் கணக்கிட்டு ஒரு வினாடி -வினா - குறும்படக் காட்சி இரவுப் பொழுதை இனிய பொழுதாய் ஆக்கிற்று. வளரும் தலைமுறையினர் பெற்றோர்க்கும் மற்றோர்க்கும் தங்கள் ஆற்றலை வெளிப்படுத்தினர். பெற்றோரும் பிள்ளைகள் முன் பிள்ளைகளாய் மகிழ்ந்தனர். இயற்கை வளம் நிறைந்த இந்த நிலப்பரப்பில் நாம் அறிந்திராத அதிசயப் பறவைகள் - விலங்குகள் - மரங்கள் - செடி கொடிகள் - மக்கள் - கடல் - ஆறு - மலை என நாம் அறிய வேண்டிய இயற்கை வளச் செய்திகள் அவை.

காலைப் பொழுதில் காட்சிகள் காண மகிழ்ந்து சென்ற உள்ளங்கள் மலைப் பகுதியில் மகிழ்வான மதிய உணவுக்குப் பின் கலந்து கொள்ள ஒரு குறுக்கெழுத்துப் புதிர். பெண்கள் அமர, ஆண்கள் பரிமாறிய பாச உணவு ! குடும்பங்கள் இணைந்து குழுவாய்ப் பிரிந்து நடத்திய போட்டி ! வெற்றி தோல்விகள் மனிதனைப் பிரித்து விடுகின்றன என்று போலும் முடிவுகள் அறிவிக்கப் படாத அன்புப் போட்டி !

ஒருவரா இருவரா - இருபத்தோறு பேரையும் ஓரிடத்தே அமர்த்தி - உணவிட்டு - உறங்க இடம் அளித்த உள்ளங்கள் உயர்ந்தன தான் ! இணைந்த நட்புகளும், ஏற்றத் தாழ்வுகளை மறந்து மனம் விட்டுப் பேசி மகிழ்ந்து உணர்வுகளை - உணவுகளை பகிர்ந்துண்ட காட்சி இன்னும் மக்கள் இங்கே இயல்பாய்த் தான் இருக்கின்றனர் என்பதை உணர்த்திற்று எனக்கு ! உள்ளத்திற்கு உவப்பான் ஒன்று கூடல் இது !

உள்ளங்கள் உயரட்டும் ! உறவுகள் வளரட்டும் !

கலந்து கொண்ட குடும்பங்கள் :

திரு லதானந்த்
திருமதி லதானந்த்
திரு பாலாஜி லதானந்த்

திரு சீனா
திருமதி செல்வி ஷங்கர்

திரு "நிகழ்காலத்தில்" சிவா
திருமதி சிவா
குழந்தைகள் - அசுவதி - ரிதனி

திரு வேங்கட சுப்ரமணியன்
திருமதி வேங்கட சுப்ரமணியன்
மகன்கள் - வசந்த பாரதி மற்றும் விபின் சந்தர் பால்

திரு தமிழ்மணம் காசி
திருமதி காசி
திருமதி காசியின் சகோதரி
குழந்தைகள் சதீஷ், காயத்ரி, லாவண்யா மற்றும் ஒரு மழலை.

திரு கொல்லான்

அரும்பாடு பட்டு, அழைத்து, திட்டமிட்டு, ஏற்பாடுகள் பல செய்து, ஒரு சிறு குறை கூட இல்லாமல் திறம்பட - குடும்பங்களை ஒருங்கிணைத்த - திரு லதானந்த், திரு பாலாஜி லதானந்த் மற்றும் திருமதி லதானந்த் அவர்களுக்கு நன்றி கலந்த நல்வாழ்த்துகள்.

செல்வி ஷங்கர்.

18 comments:

செல்விஷங்கர் said...

சோதனை மறுமொழி

Thekkikattan|தெகா said...

தமிழ் விளையாடுதே! நல்லா அனுபவிச்சிருக்கீங்கன்னு தெரியுது. அடிக்கடி இதே மாதிரி, சீனா-வை மலைகளும், மலை சார்ந்த பகுதிகளுக்கும் கூட்டிட்டுப் போனா, நீங்க நிறைய எழுதுவீங்க போலவே... :)

வவ்வால் said...

Valaipathivukal moolam ippadium oru onru koodala? Arumai! Inimai than. Kasi annachiyum vanthara, nalama? Anaivarukkum vazhthukal!

கொல்லான் said...

மிக்க பாச உணர்வுடன் நடந்த இனிய சந்திப்பு.
உங்கள் இருவரின் ஆத்மார்த்தம் எங்களுக்கு ஒரு எடுத்துக்காட்டு.
சீனா சார், நீங்கள் மற்றும் பலரின் அன்பில் திளைத்தேன்.
மீண்டும் ஒரு முறை சந்திப்போம்.
அதே ஆப்பீசர் மூலம்.
தங்கள் பதிவு அருமை.

கொல்லான் said...

தாங்களும் நேரமிருப்பின் பார்க்கவும்

http://kollaamai.blogspot.com/2010/05/blog-post_11.html

செல்விஷங்கர் said...

தெ.கா

சீனாவ நான் கூட்டிட்டுப் போக இயலுமா - அவங்கதான் என்ன கூட்டிட்டுப் போகணும் - சொல்லி வையுங்க

எழுதணும் - பாப்போம்

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

செல்விஷங்கர் said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி வவ்வால் - இப்படியும் சில பதிவர்கள் சந்திப்பு நடக்கலாம் - நடக்க வேண்டும் - காசி வந்திருந்தார் - அமைதியாக வந்து அருமையாகப் பாடி கலகலப்பூட்டினார்

செல்விஷங்கர் said...

கொல்லான்

தங்கள் இடுகையினைப் பார்க்கிறேன் - இடுகைகள் பலப்பல எண்ணங்களை வெளிப்படுத்துகின்றன - அன்பும் நட்பும் பெருகுவதற்குத்தான் இததகைய சந்திப்புகள் - வாழ்க வளமுடன்

நிகழ்காலத்தில்... said...

குழந்தகள் தங்களோடு மிகவும் ஒன்றி இருந்ததை இன்னும் என் மனைவி சொல்லிக்கொண்டே இருக்கிறார் :))

மனதின் ஆழத்திலிருந்து வந்த இடுகை

செல்விஷங்கர் said...

சிவசு

மழலைச் செல்வங்கள் எங்கள் பேத்திகளை நினைவுபடுத்தினர். மகிழ்வான் நேரமது.

அனைவரையும் கேட்டதாகக் கூறவும்

வாழ்க வளமுடன்

துரை. ந.உ 9443337783 said...

அம்மா

எனக்கும் ஒரு தகவல் சொல்லி இருந்தீங்கன்னா ஓடிவந்து சேர்ந்திருப்பேனே

லதானந்த் said...

ஆறு போன்ற அழகான நடை. தென்றற் காற்றனைய தெள்ளிய தமிழ். ஓங்கி உயர்ந்த மலை போற் கருத்துக்கள்
அழகான கட்டுரை.

செல்விஷங்கர் said...

துரை

அழைத்திருக்கலாம் - ம்ம்ம்ம்

வாழ்க வள்முடன் துரை

செல்விஷங்கர் said...

ல்தான்ந்த்

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

வாழ்க வளமுடன்

சே.வேங்கடசுப்ரமணியன். said...

நினைவுகள் நிரந்தமானவை

செல்விஷங்கர் said...

சே வே சு மணீயன்

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

நானானி said...

மலையில் சிற்றூந்தில் ஏறுவதைவிட இறங்குவது சுலபமாயிருக்கும். அது போன்ற வழுக்கிச் செல்லும் தமிழ் நடை அழகு!

செல்விஷங்கர் said...

அன்பின் நானானி

தமிழ் நடையின் அழகைக் காணும் போதெல்லாம் மொழியில் தவழும் குழந்தையாக மாட்டோமா என்று அடிக்கடி மனம் ஏங்கும். அழகு நடையில் அப்படி ஒரு மகிழ்ச்சி

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
நல்வாழ்த்துகள் நானானி
நட்புடன் செல்வி ஷங்கர்