Wednesday, December 30, 2009

குட்டி தேவதை

குட்டி தேவதை ! எந்தன்
குட்டி தேவதை !

எட்டி எட்டிப் பார்த்திடும் !
கட்டி முத்தம் தந்திடும் !

பட்டுப் போல படர்ந்திடும் !
விட்டில் போல விரைந்திடும் !

சின்னப் பாதம் தொட்டிட்டால்
கன்னங் குழிய சிரித்திடும் !

குறும்புப் பார்வை பார்த்திடும் !
கரும்பு போல சுவைத்திடும் !


குட்டி தேவதை ! எந்தன்
குட்டி தேவதை !

----------------

எங்கள் குட்டிப்பேத்தியுடன் சில நாட்கள் இருந்தபோது
மனத்தில் ஓடிய அடிகள் !

செல்வி ஷங்கர்

Tuesday, October 6, 2009

பதிவுகள் பலவிதம் - ஒவ்வொன்றும் ஒரு விதம்

பறவைகள் பலவிதம் - ஒவ்வொன்றும் ஒரு விதம் ! வானமெங்கும் ஓடி வானிலவைத் தேடி வண்ணங்கள் தீட்டுவது மனித மனம். அது ஒன்று போல் ஒன்று இருப்பதில்லை. ஆனாலும் வடிகால் என்ற ஒரே நோக்கம் இங்கிருப்பது வியப்பே !

பல்வேறு பட்ட கருத்துகள் - பலதரப்பட்ட சுவைகள் - பலவாறான எண்ண ஓட்டங்கள் - எங்கு செல்வது ? எங்கே நிற்பது ? எதில் துவங்குவது ? தொட்டபின் தோல்விகள் - நிகழ்வுகளின் முரண்பாடு - ஏற்ற இறக்கங்கள் என்று எப்படி எப்படியோ எண்ணங்கள் இங்கே வலையில் அகப்ப்படுகின்றன.

மீன் பிடித்து மீண்டும் ஆற்றில் விட ஆசை என்பது போல் எழுத்து வடிவில் ஏக்கங்கள் - தூக்கங்கள் - துயரங்கள் - துன்ப வரைவுகள் - இன்ப நிகழ்வுகள் என எத்தனை எத்தனையோ இந்த வலைப்பூவில் பூக்கின்றன.

பதிவர்களின் நோக்கம் இடுகைகளில் தங்கள் இதயத்தை வடித்து விட வேண்டும் என்பதாகத்தான் இருந்திருக்கிறது. இது ஒரு தனிப்பட்ட நாட்குறிப்பு. பலரும் காண விரித்து வைக்கப்பட்ட நிலாப் படம். மொக்கைகள் தான் பெரும்பாலும் எல்லோராலும் சுவைக்கப் படுகின்றன.அவற்றினிற்குத்தான் ஆயிரக் கணக்கான மறு மொழிகள் .

சிந்தனை வாதிகளின் இடுகைகள் பலராலும் படிக்கப்பட்டாலும் மறுமொழிகள் மிகுதியாய்ப் பெறப்படுவதில்லை. நீண்ட இடுகைகள் நைல் நதியையும் மிஞ்சி விடுகின்றன. அவை பட்டனைத் தட்டியே நீளம் பார்த்து நகர்த்தி விடப்படுகின்றன. கதைகள் காளான் பூத்தது போல் தென்படும். சுவைத்தவர்கள் மறு மொழிகளில் தங்களைப் பதிவு செய்வர்.

சிரிப்பென்று சிரிப்பே வராத சிந்தனை வாதிகளின் சில இடுகைகளும் உண்டு. வரலாற்றுப் பதிவுகள் அங்கொன்றும் இங்கொன்றுமாய்க் காணப்படும். அதில் பதிவர்களின் ஆழந்த சிந்தனை ஓட்டம் புலப்படும்.

கவிஞர்கள் தான் கவிதைப் பூங்காவில் பூத்துக் குலுங்குபவர்கள். காதல் கவிதைகள் இளமையின் நிழலாய்த் தோன்றும்.துன்பக் கவிதைகள் துயர நினைவின் சிந்தனை அலை வீசும். சமுதாயப் பார்வையாளரின் கவிதைகள் உண்மையிலேயே உள்ளத்தைத் தொடும். உழைப்பின் உருவம் அவர்களின் எண்ண ஓட்டங்களில் தென்படும்.

செய்திகளைப் பதிவுகளில் இடுபவர்கள் சிலர். உலகச் செய்திகள், உள்நாட்டுச் செய்திகள், உவகை ஊட்டும் நடிப்புச் செய்திகள், நாளெல்லாம் காண்கின்ற கேட்கின்ற நடைமுறைச் செய்திகள் என்று கவிஞர்கள் காவியமே புனைகின்றனர்.

படக்காட்சிகள்! இயற்கை! இயற்கையின் சீற்றம்!கடல்! காடு! மலை! விலங்கு! பறவை! கட்டடம்! திருவிழாக்கள்! தேரோட்டங்கள்! வாழ்க்கை! என்று நிழற்படங்களைப் பதிவுகளில் இடுவோர் பலர். கண்ணுக்கும் கருத்துக்கும் அவை சுவை கூட்டுகின்றன. இவை எல்லாம்
இவற்றின் நல்ல பக்கங்கள்.

மறு பக்கம் என்று ஒன்று உண்டல்லவா! அதன் விளைவு மேலானதாக இருப்பதில்லை. மனிதப் பண்பாட்டைச் சிதைப்பதாய் இருக்கின்றன.சில படக்காட்சிகள் கண்களை வலிக்கச் செய்கின்றன. சில கருத்துப் பதிவுகள் சிந்தனையை சீர்குலையச் செய்கின்றன. கருத்து சுதந்திரம், எழுத்து சுதந்திரம் என்று உலகினர் சிலரைச் சீண்டிப் பார்ப்பதும் சற்றே இடிக்கின்றது.

எண்ணங்கள் எழுத்துரு ஆகும் போது இலக்கணங்களை மீறாமல் இருந்தால் இனிமை சேர்க்கும். அறியாத வயதினர் ஆழ்ந்து தேடும் பக்கங்கள் மனத்தினை அலைபாயச் செய்கின்றன. பொழுது போக்காக, மன மாற்றாக, ஓய்வு நேர ஈடுபாடாக உயர்ந்த சிந்தனைகள் ஆங்காங்கே வலையில் பூப்பதும் உண்டு.

சிரிப்பதும் சிந்திப்பதும் பார்ப்பதும் கேட்பதும் பேசுவதும் எழுதுவதும் இளைப்பாறுதலாக இருக்கும் போது குழுமங்களும் பதிவுகளும் இடுகைகளால் சிறக்கின்றன. சிந்தனைப் பூக்க்கள் சிலிர் காற்றில் சிரித்து மகிழ்கின்றன. வெயிலுக்கு நிழலாக மழைக்குக் குடையாக இருந்தால் மகிழ்ச்சி தானே !

செல்வி ஷங்கர் - 06.10.2009

Thursday, May 14, 2009

சில நேரங்கள்

சில நேரங்கள்
சில நேரங்கள் தான் !
அருமையான பாட்டு !
அழகான பேச்சு !
ஆழமான கருத்து !
எளிதான வாழ்க்கை !
இனிமையான சிந்தனை !
எட்டிப் பார்க்கும் ஆசைகள் !
எண்ணிப் பார்க்கும் சில்லறை !
எப்போதும் வரும் மாதக் கடைசி !
எப்படியோ நிறைவான வாழ்க்கை !
வளர்ந்து விட்ட பிள்ளைகள் !
வழி தேடிய வாய்ப்புகள் !
காலூன்றிய காலங்கள் !
கதை பேசிய பொழுதுகள் !
கஞ்சி குடித்த நேரங்கள் !
காலில் சக்கரம்
கட்டிய கடமைகள் !
அடித்துப் போட்டாற் போல்
தூங்கிய நாட்கள் !
அனைத்தும் நினைவில் ! ஆம் !
சில நேரங்கள்
சில நேரங்கள் தான் !

செல்வி ஷங்கர்
-------------------------


Wednesday, May 13, 2009

பசங்க - திரைப்பட விமர்சனம்

இன்று பாராளுமன்றத் தேர்தல் - காலை ஓட்டளித்து விட்டு மாலை பசங்க திரைப்படம் சென்றோம்.



பாராட்டுகள் பச்சிளம் குழந்தைகளைப் பாராளவும் செய்யும். எண்ணங்களை நல்வழிப்படுத்துதல் ஒவ்வொரு பெற்றோரின் தலையாய கடமை. வளரும் உள்ளங்களை வழி காட்டி அழைத்துச் செல்வதைப் போல் உள்ளது "அன்புக்கரசன் IAS - ஜீவா CM - ரேணூகா Doctor" என்று பசங்க சொல்வது.



இயக்குனர் நன்றாகவே சிந்தித்துள்ளார். எண்ணங்களால் ஏணிப்படிகளைத் தொட்டுள்ளார். திரைப்படங்கள் எப்படியோ சென்று கொண்டிருக்கிற காலத்தில் இயல்பான சிந்தனையால் பார்ப்பவர்களை சிந்திக்க வைக்கின்றார். சிறுவர்களைச் சீர்திருத்த வேண்டுமல்லவா !



அன்பு -ஆத்திரம் - பண்பு - பாசம் என்ற குடும்பச் சூழலில் குட்டிப் பசங்களை ஒரு நல்ல வழிக்கு அழைத்துச் செல்வது பள்ளியும் வீடும் தான் என்று ஒற்றுமைக்கு நாட்டுப் பற்றை நினைவில் கொண்டு வந்தது நல்ல காட்சி. பார்த்துக் கொண்டிருந்த நானும் சனகனமன என்ற உடன் எழுந்து நிற்கத் துவங்கி விட்டேன் - திரையரங்கினில்.



எண்ணங்கள் செயல்களாக - செயல் எப்போதும் நினைவில் நிற்க வேண்டும் என்பதை அன்பு வழியில் வாழும் காந்தியடிகளை - ஆம் - அப்துல் கலாமை நினைவில் கொண்டு வந்தது பசங்க திரை ஓவியம்.



விட்டுக்கொடுத்தலும் கை தட்டிப் பாராட்டுதலும் ஊக்கமளிக்கின்ற ஆசிரியப் பணி. இறுதியில் ஜீவாவின் மடல் - very sorry - very sorry என்பதனை பல தடவை எழுதி - பந்தயத்தின் தோல்வியினால் இந்திய அஞ்சல் தலை ஐம்பது அனுப்புவது பள்ளிக் குழந்தைகளின் மன நிலையினை அழ்குற எடுத்துக் காட்டுகிறது.


கிராமியச் சூழ்நிலை - கிராமியப் பள்ளி - உயர் பள்ளி - இயல்பாகக் காட்டப் பட்டிருக்கிறது. கெளவி புருசன் - இயல்பான வசனம்.


நல்ல படம் - பார்க்க வேண்டிய படம் - பசங்க பசங்க தான்

செல்வி ஷங்கர்

Saturday, May 9, 2009

அழகர் வந்தார் !!

மதுரை சித்திரைத் திருவிழாவினை முன்னிட்டு கள்ளழகர் வைகையாற்றில் இன்று ( 09.05.2009) சனிக்கிழமை காலை 8 மணி அளவில் எழுந்தருளினார்.
------------------------------------------------------------------------------

அன்னை மீனாட்சி
அன்று வந்த
வழியெல்லாம் இன்று
அழகர் வந்தார் !

வாராரு வாராரு !
அழகர் வாராரு !
என்று
ஆடிப் பாடும்
மக்கள் ஒருபால் !

கற்பூரம் கரைகின்ற
சர்க்கரையில் மனம்
சாந்தமாய் கண்
நோக்க ! கைகூப்பும்
ம்க்கள் ஒருபால்!

விண்ணதிர மண்ணதிர
கொட்டி முழக்கி !
குரல் எழுப்பி !
கைகால் கரகமாட
கண்களிலே அழகர் !

தங்கக் குதிரை
தகதகக்க ! எங்கள்
மனம் கலகலக்க
கள்ளழகர் வாராரு !
அலை அலையாய்
மலை மலையாய்
மக்கள் வெள்ளம் !

மாடவீதி
வழி மறைக்க
மற்றுமொரு
வைகையென
வளமான
வாழ் வெள்ளம் !
வழியெல்லாம்
வானோரே
வந்ததென !

மழலை யெல்லாம்
மக்கள் தோளில் !
மன மெல்லாம்
மாலவன் தன்
மா வடிவில் !
மதுரை யெல்லாம்
மீன் விழியாள்
அருள் வெள்ளம் !

செல்வி ஷங்கர்
--------------------

Friday, May 8, 2009

அதுதான் இயற்கை !!

சித்திரை நிலவென்
சிந்தனை கலைத்தது !

சன்னல் திரையை
சற்றே விலக்கி
எட்டிப் பார்த்தது !

எப்படி இந்த
ஒளி மின்னல்
ஓவியம் வரைந்தது
போல் வந்தது !

காற்று வரும்
வழியே நேற்று
வந்தது தானே
என்று நினைத்தேன் !

பார்வையில் பட்டதும்
பாசப் புன்னகை
பூத்தது ! வான்பூ !
ஆம் !

அன்றும் இன்றும்
அதே நிலவுதான் !
ஆனாலும் அதுபுதுமை !
அதுதான் இயற்கை !

Friday, May 1, 2009

பட்டாம் பூச்சி

எப்போதாவது எட்டிப்பார்க்கின்ற எனக்கு பட்டுப்போன்ற பட்டாம்பூச்சி விருதா என்று வியந்தேன். சரி சரி யாராவது பாராட்டினால் ஏன் பதுங்க வேண்டும், பட்டாம் பூச்சி போல் சிறகடித்துப் பறப்போமே என்று மகிழ்ந்தேன் !

மென்மையான சிறகுகள் - வண்ண வண்ணக் கோலங்கள் - யார் வரைந்து வைத்தது அதன் முதுகில் என்று நான் வியந்ததுண்டு. கூட்டுப்புழு குளிர்ந்த வண்ணத்தில் சிறகு முளைத்து வெளிவரும் முயற்சியை நான் நம்பிக்கை மொழிகளாய் நினைத்ததுண்டு. நம்பிக்கை தானே நம் வெற்றி.

வெற்றியையும் பாராட்டையும் பகிர்ந்து கொள்வது தானே பசுமைத் தமிழின் பாங்கு. அப்பாங்கை தமிழ் அன்பர்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். நான் பெற்ற இன்பம் பெறுக வையகம்.

எனக்கு இப்பெருமையை அளித்த தோழி மதுமிதாவிற்கு வாழ்த்துகள் -பாராட்டுகள்.

இப்பொழுது தொடர் செயலாக பட்டாம்பூச்சி விருதினை அருமைத்தோழிகள் - நானானி- துளசி மற்றும் பாசமலர் ஆகிய மூவர்க்கும் வழங்குகிறேன். மகிழ்ச்சி அடைகிறேன்.

இந்த மூன்று பதிவர்களின் இடுகைகள் பலவற்றை எனக்குக் கற்றுத் தந்திருக்கின்றன. துளசி பார்க்காத துறையே இல்லை. நானானி நன்றாகச் சிந்தித்தூ சிறு கருத்தைக் கூட செம்மையாய்ப் பாதியும் திறமை வாய்ந்தவர். பாசமலர் பன்மொழிச் சிறப்புடன் பதிவுகள் தருபவர். கவிதைகள் எம்மொழியிலும் கரையைத் தொடும்.

விருது பெற்ற மூவருக்கும் பாராட்டுகள் - நல்வாழ்த்துகள்

விதி முறைகள் :

இந்த விருது - ஒலிம்பிக் ஜோதியை எடுத்துக்கிட்டு போறது போல - அதனால, பின்பற்றவேண்டிய சில விதி முறைகள்:

1. இந்த பட்டாம்பூச்சி இலச்சினை உங்கள் பதிவு பக்கத்தில் இருக்க வேண்டும் (Put the logo on your blog)

2. உங்களுக்கு விருது கொடுத்த நபரின் இணையதள முகவரிக்கு ஒரு இணைப்பு கொடுக்க வேண்டும் (Add a link to the person who awarded you)

3. மூன்று அல்லது அதற்கு மேலான பதிவர்களைத் தேர்வு செய்ய வேண்டும் (Nominate at least 3 other blogs)

4. தேர்வுசெய்யப்பட்ட பதிவுகளிற்கு உங்கள் பதிவில் இருந்து இணைப்பு தர வேண்டும் (Add links to those blogs on yours)

5. நீங்கள் தேர்ந்தெடுத்த பதிவுகளில் அவர்களுக்கு இச்செய்தியை தெரிவிக்க வேண்டும் (Leave a message for your nominees on their blogs)அதனால மூணுபேருமே என்னைப்போல தாமதிக்காமல் பட்டாம்பூச்சி போல பறந்து பறந்து விருதைக் கொடுத்துடுங்க:)

வணக்கம்.

செல்வி ஷங்கர்