Tuesday, September 25, 2007

கடமை

காலந் தவறாமல் செய்ய வேண்டும் !
கடின உழைப்பால் பெற வேண்டும் !
உழைப்பால் உயர உண்மை வேண்டும் !
ஆற்றிய பணிகள் சொல்லும் நம்மை !
போற்றிய செயல்கள் பேசும் நம்பெருமை !
விட்டுக் கொடுத்தால் உயர்வோம் !
வீட்டில் கடமை வெளியில் கடமை
வேத வாக்காய் விளங்க வேண்டும் !
பிள்ளைகள் பேச்சும் செயலும்
பெற்றோர் பின்புலம் ! மற்றவர்
பார்வை நம் உட்புலம் !
நல்ல உள்ளங்கள் நல்ல செயல்கள்
நாம் பெற்ற பேறு ! கற்றதின் பரிசு !
நன்செயல் எண்ணவும் இன்சொல் பேசவும்
தயங்காதே ! இதில் என்ன சுமை !
சுவை தானே இவை !
காலத்தால் அழியாத கவி அல்லவா !
ஆற்றிய பணிகள் சொல்லும் நம் அருமை !

மக்கள்

மரங்களை நட மறப்பவர்கள் !
உரங்களை மட்டும் இடுபவர்கள் !
இயற்கையைக் காக்க மறுப்பவர்கள் !
செயற்கையின் செழிப்பை அழிப்பவர்கள் !
இருப்பதை இழந்து விட்டு இங்கே
இல்லாததைத் தேடுபவர்கள்

உலகம்

ஓடிக்கொண்டிருப்பது !
நிற்பதற்கு நேரமில்லாதது !
இன்று விட்டால் நாளை இல்லை !
காலத்தால் மாறுவது !
கவிதையில் சிறப்பது !
உயிர்களைச் சுமப்பது !
உணர்வுகளை விதைப்பது !
மாற்றங்களை காண்பது !
மாற்றம் இல்லாதது !

அரிச்சுவடி

அன்பு காட்டு !
ஆற்றல் கொள் !
இன்பம் உணர் !
ஈகை செய் !
உண்மை உரை !
ஊதியம் போற்று !
எதையும் எதிர்கொள் !
ஏற்றம் காண் !
ஐயம் அகற்று !
ஒற்றுமை உயர்வு !
ஓவியம் சுவை !
ஒளவியம் அகற்று !
ஆய்தம் [ஃ] பயில் !

ஏன் ?

கண்கள் கசிவதற்குக் காரணம் என்ன ?
கருத்துகள் கலங்குவதற்கு அடிப்படை எது ?
புன்னகை பூப்பதற்கு பூமியே சுழல்வதேன் ?
பூக்களைப் பறிப்பதற்கு புத்துணர்வு ஏன் ?
பாக்களைப் படிப்பதற்கு பல்சுவை ஏன் ?

Saturday, September 22, 2007

ஏங்குவது

தரணியில் வாழ தாரக மந்திரம்
வேண்டாம்! ஊரக உணர்வு
வேண்டும்! எல்லாம் ஆசை தானே!
இல்லையெனில் உலகேது?

நினைத்தது

அன்பு காட்டப்பட வேண்டும்!
பாசம் உணர்த்தப்பட வேண்டும்!
பரிவு செயல்களில் வேண்டும்!
கண்களில் கருணை வேண்டும்!
கைகளில் செயல்கள் வேண்டும்!
மொத்தத்தில் தன்னைப் போல்
பிறரை எண்ண வேண்டும்!

நிகழ்ந்தது

அன்புக்கும் ஆசைக்கும்
அடித்தளம் இல்லாமல்
ஆளாக வளர்ந்தேன்!
காசு கொடுத்தால் கிடைக்குமா இவை!
என்னே! அறியாமை!
எங்கே இருக்கிறது உலகம்?
ஏட்டுக்குள் இருக்கிறதா? இல்லை
வீட்டுக்குள் இருக்கிறதா?

கடந்தது

பாசத்தைப் பார்க்காமல்
பண்பில் வளர்ந்தேன்!
நேசத்தைக் காட்டாமல்
நெறிகள் உணர்ந்தேன்!
பணம் இல்லாததால்
பக்குவப் பட்டேன்!

நான்

நெருப்புக்குள் குளிர் காய வேண்டும்!
பனிப் படிவுக்குள் பாய் விரிக்க வேண்டும்!
நதியோரம் அலை பாய வேண்டும்! நான்
கடலுக்குள் கனவு காண வேண்டும்!
தமிழ் உணர்வுக்குள் தலை சாய்க்க வேண்டும்!

தமிழ்

கன்னித்தமிழே!
உன்னைப் படித்ததால்
உயர்ந்தேனா? இல்லை
என்னை உணர்ந்ததால்
உயர்ந்தேனா? அது என்ன
பார்த்தாலே சுவையுணரும்
பா............உந்தன் பா!

Friday, September 21, 2007

அறிமுகப் பதிவு

வள்ளுவனின் வான் மறையையும் பாரதியின் பாவடிகளையும் படிக்கின்ற போது என் எண்ணம் சிறகடித்துப் பறக்கும். இவர்களால் எப்படி - இப்படி எழுத முடிந்தது? என்று.
இவர்கள் பார்த்ததை எழுதினார்களா? இல்லை வாழ்ந்ததை எழுதினார்களா?
வாழ்க்கை வரலாறே இல்லாத வள்ளுவன் வாழ்க்கையை படம் பிடித்துக் காட்டினானே!
பாராத வாழ்வினைப் பார்த்து விட்டதாக பாடினானே பாரதி! இல்லை இல்லை! வாழ்ந்தானே பாரதி!
இவர்களின் எழுத்துகள் சொல்வதைப் போல் என் எண்ணம் பேச வேண்டும்! எழுத்து பேச வேண்டும்! இந்த பாரதத்தை பார் பேச வேண்டும்!
அதற்கு என் எழுதுகோல் இங்கே உலவ வேண்டும்!